தமிழ்நாடு அரசின் UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டத்துக்கான மதிப்பீட்டுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் அகில இந்திய குடிமை பணித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் "நான் முதல்வன் - போட்டித் தேர்வு" என்ற பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு தமிழக இளைஞர்கள் மத்திய அரசு நடத்தும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்கத் தேவையான உதவிகளைச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சி, திறன்களை வளர்த்துக் கொள்ளும் உதவிகளைச் செய்கிறது. இது குடிமைப் பணித் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி பெறும் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாகும்.
இதையும் படியுங்கள்: இங்கிலாந்தில் பட்டம் பெற லட்சக்கணக்கில் செலவழித்தும் வேலை தேட போராட்டம்; தவிக்கும் இந்திய மாணவர்கள்
2023-24க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, குடிமைப் பணிகள் தேர்வுகளுக்குப் படித்து வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி சிவில் சர்வீசஸ் முதல் நிலை (PRELIMS) தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு செப்டம்பர் 10 அன்று "NAAN MUDHALVAN UPSC PRELIMS SCHOLARSHIP EXAM 2023" எனப்படும் மதிப்பீட்டுத் தேர்வை நடத்தப்படும். இதில் தேர்வாகும் 1000 மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 7,500 பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாதாந்திர உதவித்தொகைத் திட்டத்துக்குத் தேர்வு செய்யப்படும் 1000 நபர்களில், 50 இடம் முதல் முறையாக குடிமைத் தேர்வு எழுதுபவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான வயது வரம்பாக 21 வயதில் இருந்து 22 வயதை எட்டாமல் இருக்க வேண்டும் ( 01.08.2024 ஆம் தேதிக்குள்). மருத்துவம், ஒருங்கிணைந்த பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பின் போது உரிய சான்றுகளைச் சமர்ப்பித்தால் வயது தளர்வு வழங்கப்படும். வயது தளர்வு தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கே (TNSDC) உண்டு.
இந்த மதிப்பீட்டுத் தேர்வுக்கான தகுதிகள் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான தகுதிகளுக்கு சமமாக உள்ளது.
வயது தகுதி
குறைந்தபட்சம் - 21
அதிகபட்சம் பொதுப்பிரிவினர் – 32
பி.சி/ எம்.பி.சி/ பி.சி.எம் - 35
எஸ்.சி/ எஸ்.டி - 37
கல்வித் தகுதி
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தில் தேர்வு எழுத ஏதேனும் ஒரு மையத்தைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு மையத்தின் இடம் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்படும். தேர்வு மையங்களை அதிகரிக்கவும் குறைக்கவும் அதற்கேற்ப விண்ணப்பதாரர்களை வேறு மையங்களுக்கு மாற்றவும் TNSDC-க்கு (தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு) முழுஅதிகாரம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் தேர்வுக்கு வர வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியாக 17.08.2023 அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://nmcep.tndge.org/apply_now என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே மத்திய மாநில அரசுப்பணிகளில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள், இந்த மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது. இந்த உதவித்தொகையைப் பெறும் மாணவர்கள் 2024-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்து, TNSDC க்கு சமர்ப்பிக்க தவறிய விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு OMR அடிப்படையில் நடைபெறும். அதில் 150 கேள்விகள் (100 பொது அறிவு + 50 CSAT) கேட்கப்படும். தவறான பதில்களுக்கு எதிர்குறி மதிப்பெண்கள் இல்லை. கேள்வித்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே கொடுக்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.