நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் எதிரொலியாக, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை ஒத்திவைப்பதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) வியாழக்கிழமை அன்று அறிவித்துள்ளது. இந்த தேர்வு ஜூன் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டது. தற்போது, யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பள்ளி, கல்லூரித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல் எஸ்.எஸ்.சி உள்ளிட்ட பல்வேறு மாநில பணியாளர் தேர்வாணையங்களும் தங்களது தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமைகளின் காரணமாக, 2021 ஜூன் 27 அன்று நடத்த திட்டமிடப்பட்ட மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ்- 2021 ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வை ஆணையம் ஒத்திவைத்துள்ளது. இப்போது, இந்த தேர்வு 2021 அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் என்று ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு ஆண்டும், யுபிஎஸ்சி, சிவில் சர்வீசஸ் தேர்வை மூன்று கட்டங்களாக நடத்துகிறது. அவை, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் மற்றும் நேர்காணல். இந்திய ஆட்சி பணி(ஐஏஎஸ்), இந்திய வெளியுறவு சேவை (ஐஎஃப்எஸ்) மற்றும் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கிடையில் யுபிஎஸ்சி தனது அனைத்து தேர்வுகள் மற்றும் அறிவிப்புகளையும் ஒத்திவைத்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil