/tamil-ie/media/media_files/uploads/2023/02/UPSC-3.jpg)
UPSC results Ramanathapuram youth achieves feat in first attempt
அகில இந்திய குடிமை பணிகள் (UPSC) தேர்வில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீரஷத் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று, தமிழக அளவில் 5-ம் இடத்தையும், அகில இந்திய அளவில் 52-ம் இடத்தையும் பிடித்து பெரும் சாதனை புரிந்துள்ளார்.
ராமநாதபுரம் அரண்மனை தெருவைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் ராம்பிரகாஷ் மற்றும் லட்சுமி தம்பதியரின் மகன் ஸ்ரீரஷத் (22). இவர் தனது ஆரம்ப கல்வியை ராமநாதபுரத்தில் முடித்தார். விவேகானந்தா வித்யாலயா, இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிக், கேந்திரிய வித்யாலயா ஆகிய பள்ளிகளில் படித்ததற்குப் பின்னர், பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். 2023-ம் ஆண்டு புதுடில்லி மோதிலால் நேரு கல்லூரியில் தனது உயர்கல்வியை முடித்தார்.
பட்டப் படிப்பை முடித்தவுடன் டில்லியில் தங்கி UPSC தேர்விற்கான பயிற்சியில் ஈடுபட்ட ஸ்ரீரஷத், முதல் முயற்ச்சியிலேயே இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
“முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் புத்தகங்கள், அவருடைய சொற்பொழிவுகள் எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தன. பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் ஐஏஎஸ் கனவைக் கண்டேன்,” எனத் தெரிவிக்கும் ஸ்ரீரஷத், தனது வெற்றிக்கு தாத்தா தனபாலன், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கமே காரணமாக இருந்ததாக கூறுகிறார்.
வர்த்தக சங்கத் தலைவராகவும் சமூக சேவகராகவும் செயல்பட்ட தாத்தாவின் பாதைதான், ஸ்ரீரஷத்துக்கு வழிகாட்டியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஐஏஎஸ் அதிகாரியாக நிதி, கல்வி மற்றும் சுகாதார துறைகளில் மக்களின் முன்னேற்றத்துக்காக செயலாற்றுவேன் என உறுதிபூண்டுள்ளார் ஸ்ரீரஷத். அவருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.