இந்திய விமானப்படையில் பணியாற்றுவதற்கான அக்னிவீர வாயு தேர்வில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "இந்திய விமானப்படையினரால் நடத்தப்பட உள்ள அக்னிவீர வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு 07.01.2025 முதல் 27.01.2025 வரை இணையவழி மூலமாக பதிவு செய்யலாம் எனவும், 22.03.2025 முதல் இத்தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இத்தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அக்னிவீரவாயு பணிக்கு திருமணம் ஆகாதவராகவும் (ஆண் மற்றும் பெண்) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12- ம் வகுப்பு அல்லது மூன்று வருட பட்டய படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளில் 50% மதிப்பெண்களுடன் குறிப்பாக ஆங்கில பாடத்தில் 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.01.2005 முதல் 01.07.2008 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.
இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் (பொது) விண்ணப்பதாரர்களுக்கு (திருமணமாகாத ஆண்கள் மட்டும்) 29.01.2025 அன்று ஆட்சேர்ப்பு பேரணி கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்பேரணியில் கலந்துகொள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 50% மதிப்பெண்களுடன் குறிப்பாக ஆங்கில பாடத்தில் 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 03.07.2004 முதல் 03.07.2008 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், மருத்துவ உதவியாளர் மருந்தாளர் விண்ணப்பதாரர்களுக்கு (ஆண்கள் மட்டும்) 04.02.2025 அன்று ஆட்சேர்ப்பு பேரணி கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்பேரணியில் கலந்துகொள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 50% மதிப்பெண்களுடன் குறிப்பாக, ஆங்கில பாடத்தில் 50% மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றதுடன் டிப்ளமோ அல்லது இளங்கலை பார்மசி முடித்திருக்க வேண்டும்.
இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 & 94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி - க.சண்முகவடிவேல்