புதுச்சேரியில் தலித் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நீதியரசர் பாரதிதாசனிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி அரசின் இலவச கல்வி அரசாணைக்கு விரோதமாக தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கல்வி கட்டண குழுவில் பெற்றோர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்களின் மீதான விசாரணை கல்வி கட்டண குழுவின் முதன்மை அதிகாரியும், நீதி அரசருமான பாரதிதாசனின் முன்னிலையில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: NExT: அடுத்த ஆண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு; தகுதிகள் என்ன? எவ்வளவு காலம் செல்லுபடியாகும்?
விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழ்வாணன் ஆகியோரிடம் நீதி அரசர் பாரதிதாசன் விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பிடமும் விசாரணை நடைபெற்றது.
இரு தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த நீதி அரசர் பாரதிதாசன் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் அரசாணைக்கு விரோதமாக கட்டணம் கேட்கவே கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், தனியார் பள்ளிகளுக்கான புத்தக கட்டணம் மற்றும் சீருடை கட்டணம் ஆகியவற்றை கல்வி கட்டண குழு உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், அமைப்பு செயலாளர் தலையாரி, முற்போக்கு மாணவ கழக மாநில செயலாளர் தமிழ்வாணன், துணைச் செயலாளர் சிவச்சந்திரன் ஆகியோர் இணைந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நீதியரசரிடம் வழங்கினர். இந்த சந்திப்பின்போது திருபுவனை தொகுதி செயலாளர் ஈழவளவன், வி.சி.க நிர்வாகிகள் தவசி, சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil