வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வின் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. இதுகுறித்த முழு விபரத்தை இப்போது பார்ப்போம்.
இந்தியாவின் தலைசிறந்த தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்று வேலூர் வி.ஐ.டி. இங்கு மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற வேண்டும். இங்கு பொறியியல் படிப்புகளை படிக்க ஆண்டுதோறும் 2-3 லட்சம் மாணவர்கள் நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர். இங்கு 14000க்கும் அதிகமானோருக்கு நுழைவுத் தேர்வு மூலம் இடம் வழங்கப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் கேம்பஸ் இண்டர்வியூவில் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் வேலைகளுக்கு தகுதி பெறுகின்றனர். இதனால் இந்த நுழைவுத் தேர்வு மிகவும் போட்டி வாய்ந்ததாக உள்ளது.
இந்தநிலையில் 2025 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வின் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 31.03.2025 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க https://viteee.vit.ac.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த நுழைவுத் தேர்வுக்கான தேதிகள் விண்ணப்பப் பதிவு முடிந்த பின்னர் அறிவிக்கப்படும். நுழைவுத் தேர்வு சுமார் 10 நாட்கள் நடைபெறும். தேர்வர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நாளை தேர்வு செய்து, அந்த நாளில் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.
இந்த நுழைவுத் தேர்வில் கணிதம் (40 வினாக்கள்), இயற்பியல் (35 வினாக்கள்), வேதியியல் (35 வினாக்கள்), ஆங்கிலம் (5 வினாக்கள்) மற்றும் திறனறி (10 வினாக்கள்) பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். கணிதம் விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக, மற்ற பாடங்களுடன் உயிரியல் பாடத்தை தேர்வு செய்துக் கொள்ளலாம்.
நுழைவுத் தேர்வுகள் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 முதல் 27 வரையிலான தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கவுன்சலிங் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை முழுமையாக தரவரிசை பட்டியல் அடிப்படையில் நடைபெறும். இடஒதுக்கீடு எதுவும் கிடையாது. வி.ஐ.டி வேலூர் மற்றும் சென்னை வளாகத்தில் படிக்க தரவரிசையில் ஒரு லட்சம் இடத்திற்குள் வரவேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“