தேர்வன்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தயார்செய்து கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த பட்டதாரியின் வணக்கங்கள்.
என்னப்பா இது டிஎன்பிஎஸ்சி பரீட்சை ..... ஆறாவது புத்தகத்திலிருந்து கேள்வி கேட்பான்! கேள்வி எல்லாம் வெறும் டேட்டும் நம்பருமாக இருக்கும் ! ரொம்ப சில்லித்தனமா கேள்வி இருக்கும் ! டிஎன்பிஎஸ்சி பரிட்சைல மனப்பாடம் செஞ்சா போதும்,யோசிக்க வேணாம் !அப்படிங்கிற பேச்ச நீங்க கடந்து வந்திருப்பிங்க.
இதுக்கெல்லாம் மறுப்பு தெரிவிக்கும் விவாதக் கட்டுரை இது இல்லை . அனைத்தையும் ஒத்துக்கொண்டு, அந்த தேர்வின் அடிப்படை சாராம்சமான மனப்படத்தை விவரிப்பதே இந்த கட்டுரை.
மனப்பாடம் தேவையில்லாத ஒன்றா ?
இன்றைய நவீன காலத்தில் அறிவியலின் ஆக்ரோஷ வளர்ச்சியில் மனப்பாடம் தேவையில்லாத ஒன்றாகிவிட்டது. மனப்பாட திறன் ஒரு செயலற்றதாகவும், ஒரு பழமைவாதமாகவும் கருதப்படுகிறது. இன்றைய வாழ்க்கை உங்களிடம் எதிர்பார்ப்பது நேற்றைய தினங்களின் நியாபகங்களை அல்ல நாளைய வளர்ச்சி,அறிவியல் பார்வை, மேலோங்கித்தனம் .
இன்று கூகிள் முதல் வாட்ஸ்அப் வரை உள்ள தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த நமக்கு தேவையான ஒரே தகுதி நமது நியாபகமற்ற தன்மை . faceapp செயலி என்பது நமது எதிர்கால மறதியின் ஒரு வெளிப்பாடு.
ஆனால் ,எல்லா கலாச்சாரமும் ,வாழ்க்கை அடையாளமும் ஏதோ ஒரு மனப்பாடத்தில் தான் கட்டமைக்கப்படுகிறது . மனிதர்களின் மனப்பாடத்தில் தான் மரணமும்,பிறப்பும், பிறப்பில்லாத மரணத்தையும் அடையாளப்படுத்தப்படுகின்றன. உண்மையில் சொல்லுங்கள் , எல்லா கடவுளும் நமது மனப்பாடத்தில் வாழ்கின்றதா ? அல்லது நம் அறிவியல் பார்வையில் வாழ்கின்றதா ?
ஒவ்வொரு மனப்பாடமும், நியாபகங்களும் நேற்று தோன்றிய புதுமை ,நாளை பிறக்கவிருக்கும் பழமை . மனப்பாடம் ஒருவகையான சமூக நீதி. வாழ்ந்த காலத்தின் குரல். மனித இனத்தின்
அடித்தளம்.
ஏன் இந்த உலகில் ஏதோ ஒன்று உள்ளது? ஏன் ஒன்றுமில்லாமையாய் இல்லாமல் போனது? இந்த கேள்விகள் iit/jee தேர்வெழுதும் என் அறிவியல் பட்டதாரி சகோதரனுக்குப் புரியாது. அறிவியல் பார்வை இந்த கேள்வியை என்றைக்கோ கைகழுவி விட்டன.
அக்காவின் திருமணம் ,குடும்ப கடன், சமூக அந்தஸ்து , கண்ணீருடன் டிஎன்பிஎஸ்சி தேர்வறையில் கேள்வித்தாளை திருப்பும் நமது பெண்களிடம் கேளுங்கள் இந்த கேள்விகளுக்கான பதிலை!!!
அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றிபெற போகும் இவர்களிடம் தான் ஜனநாயகம் முழுமையடைகிறது. தத்துவம் தத்துவமாக்கப்படுகிறது. அறிவியலும் மனப்பாடமும் ஒத்துப்போகாது என்று சொல்லவில்லை. மனப்பாடத்திற்கான சமூக அறிவியலை,அரசியலை நாம் கண்டுகொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
தேர்வாளர்களே! செட் டாப் பாக்ஸ் முதல் BookMyShow மூவி டிக்கெட் ஆப் வரை உங்களை மகிழ்விக்க , சிதறடிக்க, ஏன்? உங்களை உங்களுக்கு நியாபகப்படுத்த சென்னையில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் கோடி முதலீடு செய்து கொண்டிருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.
உலகக்கோப்பை முடிந்து இப்போதுதான் உள்ளூர் கோப்பையாம் BiggBoss நடந்துக் கொண்டிருக்கிறது.
புது வாழ்வியலை இந்த பத்திரிக்கைகள் விவாதிக்கப்போவதில்லை , H .ராஜாவையும் அவரது அட்மினையும் இவர்கள் விடுவதாயும் இல்லை .ஏனென்றால் இவைதான் இன்றைய மிடில் கிளாஸின் நியாபகங்கள் ! மொழிகள்!
அசோகரையும் ,அக்பரையும் போராடி மனப்பாடம் செய்து இன்றும் அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த மிடில் கிளாஸின் மொழிகளை மனப்பாடம் செய்து மறக்க எவ்வளவு நேரம் ஆகப் போகிறது!