தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகள் வரும் திறக்க அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இதர வகுப்புகளுக்கான பள்ளிகள் தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிட வில்லை.
கொரோனா நோய் பரவும் நிலை முழுமையாக கட்டுக்குள் வராத காரணத்தினால், இதர மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு யோசித்து வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தற்போது 9- 12 வகுப்பறைகளில் அதிகபட்சமாக 25 மாணவர்கள் மட்டும் அமர வைக்கப்பட்டுள்ளனர். அதிக வகுப்பறைகளில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எனவே, இதர மாணவர்களை தற்போது பள்ளிகளுக்குள் அனுமதித்தால் உள்கட்டமைப்பு இல்லாத அரசுப் பள்ளிகளில் கொரோனா வழிமுறைகளை பின்பற்ற முடியாத சூழல் உருவாகும் என்றும் தெரிவிகின்றன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்திஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அன்றாட பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில் கடந்த 4 வாரங்களாக, வார சராசரி கொவிட் பாதிப்பு குறைந்தபட்சம் 34,800 முதல் அதிகபட்சமாக 42,000 வரை இருந்தது. மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 18,200-லிருந்து 21,300 ஆக அதிகரித்துள்ளது. முகக்கவசம், சமூக விலகல் நெறிமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எச்சரித்திருந்தார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்று 442 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,49,166 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், " இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் இதுவரை 36 பயணிகளுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
அன்றாட பாதிப்பு அதிகரிப்புக்கு உருமாறிய கொரோனா பரவல் நேரடி காரணமாக இருக்கலாம் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று மத்திய சுதாதராச் செயலாளர் முன்னதாக தெரிவித்தார்.
இதற்கிடையே, பள்ளி, கல்லூரி ஆசிரியர்களையும் முன்களப் பணியாளர்களாக கருதி அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
மற்ற மாநிலங்களில் என்ன நிலை:
தெலுங்கான:
6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெலங்கானா அரசு அறிவித்தது. முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பீகார்: பீகாரில் 1 முதல் 5 -ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கும் என்று அம்மாநில அரசு தெரிவித்தது.
50 சதவீத அளவிலான மாணவர்கள் வகுப்பறையில் அனுமதிகப்படுவர் என்றும், அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டது.
உத்தர பிரதேசம்: 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில், 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 10ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல் படத் தொடங்கின. 9- 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஜனவரி 18ஆம் தேதி முதலே பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil