தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளிவந்துள்ளது. இதில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடிய திமுக செல்லத்தக்க வாக்குகளில் 37.7% வாக்குகளை பெற்றிருப்பதுடன், 133 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இருப்பினும் திமுக இந்த தேர்தலில் பெற்றுள்ள வாக்கு சதவீதம், அந்தக் கட்சி 1996க்குப் பிறகு வென்ற மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் இது கட்சியின் இரண்டாவது மிகக் குறைந்த வாக்கு சதவீதமாகும்.
2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகக் குறைவாக 26.5% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும், திமுக தனியாக 96 இடங்களில் மட்டுமே வென்றதால், ’சிறுபான்மை அரசாங்கம்’ என்று எதிர்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. 1996 தேர்தலில் தான் திமுக அக்கட்சியின் அதிகபட்ச வாக்கு சதவீதமான 42.1% வாக்குகளைப் பெற்றது. அந்த தேர்தலில் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிரான அலை மாநிலம் முழுவதும் இருந்தது.
மற்றொரு பெரிய திராவிடக் கட்சியான அதிமுக, 2011 தேர்தலில் 38.4% வாக்குகளைப் பெற்று ஆட்சியை பிடித்தது. 2016 தேர்தலில் 40.8% வாக்குகளைப் பெற்று ஆட்சியை இரண்டாவது முறையாக தக்க வைத்தது. அதிமுகவின் மிகக் குறைவான வாக்கு சதவீதம் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற 31.4% ஆகும். அந்த தேர்தலில் அதிமுக 132 தொகுதிகளில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக பெற்ற 32% வாக்குகளுடன் ஒப்பிடும்போது தற்போது 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் 5% அதிகரித்துள்ளது. ஆனால் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் வாக்கு விகிதம் சுமார் 31% ஆக இருந்தது. கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு 25 இடங்களை மட்டுமே ஒதுக்கியது திமுகவின் இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் ஓரளவு அதிகரித்ததற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 2019 மக்களவைத் தேர்தலில் கிடைத்த 12.5 சதவீதத்திலிருந்து சுமார் 5% குறைந்துள்ளது. திமுக 173 இடங்களில் போட்டியிட்டதன் மூலம், காங்கிரசின் வாக்கு சதவீதத்தில் ஒரு பகுதியை தனக்கு மாற்றிக் கொள்ள திமுகவால் முடிந்துள்ளது. அதேநேரம் அதிமுகவைப் பொறுத்தவரையில், 2019 மக்களவைத் தேர்தலில் கிடைத்த 18 சதவீதத்திலிருந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனது வாக்கு சதவீதத்தை 34.24 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஆனால் இது 2016 தேர்தலில் பெற்றதை விட கிட்டத்தட்ட 7% குறைவாக இருந்தாலும், அதிமுக 2021 தேர்தலில் தனது வாக்கு சதவீதத்தை பாமகவிற்கு 23 இடங்கள் மட்டும் ஒதுக்கியதன் மூலம் உயர்த்திக் கொள்ள முடிந்தது. இதன் மூலம் பாமகவின் வாக்கு சதவீதத்தில் 2%ஐ அதிமுக பெற முடிந்தது.
ஆப்பிள்களை ஆரஞ்சுடன் ஒப்பிட முடியாது என்று திமுகவின் செய்தித் தொடர்பாளர் மனுராஜ் சண்முகசுந்தரம் கூறுகிறார். 2016 தேர்தலில் அதிமுக சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து 234 இடங்களிலும் தங்களது கட்சி சின்னத்தில் போட்டியிட்டது. அதே நேரத்தில் திமுக 2021 தேர்தலில் 173 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடுவது மற்றும் மீதமுள்ளவற்றை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது ஒரு அரசியல் கட்சியின் வியூகமாகும். இருப்பினும் திமுக பெரும்பான்மையைப் பெற்றுள்ளதால், அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையைப் பெறுகிறது, என்றும் மனுராஜ் கூறியுள்ளார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கடந்த காலங்களில் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கியதால் தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு திணறின. 2006 தேர்தலில் காங்கிரஸ், பாமக மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு இடங்களை வழங்குவதில் திமுக தாராளமாக இருந்தது. இதன் விளைவாக, அது வெறும் 130 இடங்களில் மட்டுமே போட்டியிட முடிந்தது. அந்த தேர்தலில் 96 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. திமுக ஆட்சி அமைத்த போதும் ‘சிறுபான்மை அரசாங்கம்’ என்ற விமர்சனத்தை பெற்றதால், பெரிய கட்சிகள் இனி ஒரு போதும் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்குவதில்லை என்று சபதம் செய்தன.
அதிர்ஷ்டவசமாக, திமுகவின் கூட்டணிக் கட்சிகள் கூடுதலாக 10% வாக்குகளைப் பெற்றுள்ளதால், கூட்டணி பயனடைந்துள்ளது. மேலும், 2001 தேர்தலில், அதிமுகவும் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாமக மற்றும் கம்யூனிஸ்டுகள் உட்பட அதன் கூட்டணி கட்சிகளுக்கு 94 இடங்களை வழங்கியது, அதனால் அதிமுக 140 இடங்களில் மட்டுமே போட்டியிட முடிந்தது, என்று அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். ஆனால் 2001 தேர்தலில் பலவீனமான கூட்டணியைக் கட்டியெழுப்பியதால், அதிமுக போட்டியிட்ட 140 இடங்களில் 132 இடங்களை வென்றதோடு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.