2019 Lok Sabha election : தமிழகமே வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. ஒருபக்கம் திமுக, அதிமுக கட்சிகள் ஒரே நாளில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதிமுக கூட்டணியில் பிஜேபி, பாமக, மற்றும் தேமுதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தேமுதிக - கூட்டணியை எடுத்துக் கொண்டால் அதிமுக - திமுக என இரண்டு கூட்டணியிலும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேமுதிக - வின் இந்த செயல்பாடும் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. கடைசியில்
அதிமுக கொடுத்த நான்கு தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு அவர்களுடன் கூட்டணி அமைக்கவும் ஒத்துக் கொண்டது.
இந்நிலையில் தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் விருதுநகர் என நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நான்கு தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பட்டியல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இதோ..
கள்ளக்குறிச்சி தொகுதி - எல்.கே.சுதீஷ்
திருச்சி தொகுதி - இளங்கோவன்
விருதுநகர் தொகுதி - அழகர்சாமி ( ஐந்து முறை வென்ற இத்தொகுதியை, தேமுதிக தந்த அழுத்தத்தால், விட்டுக்கொடுத்திருக்கிறது அதிமுக. )
வடசென்னை தொகுதி - மோகன்ராஜ்
இந்த நான்கு வேட்பாளர்களுக்கு கடும் போட்டியாக மற்ற கட்சிகளில் நிறுத்தப்பட்டுள்ள எதிர் வேட்பாளர் பட்டியலும் இதோ.
1. திமுக சார்பில் கள்ளகுறிச்சியில் டாக்டர். கவுதம சிகாமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவர்.
2. மூன்று முனை போட்டி :
திருச்சி தொகுதி திமுக -வுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு, மறைந்த முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஜோசப் லூயிஸ் நிறுத்தப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.திருச்சி மக்களவைத் தொகுதியில் 4 முறை வென்ற மறைந்த எல்.அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை கடிதம் ஒன்றும் ராகுல் காந்திக்கு அனுப்பட்டுள்ளது.அமமுக அணி சார்பில் சாருபாலா தொண்டைமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
3. மூன்று முனை போட்டி
விருதுநகர் தொகுதியில் திமுக - வுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமமுக அணி சார்பில் முன்னாள் சபா நாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரையை விருதுநகரில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னு வெளியாகவில்லை. மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதி வி.ஐ.பி. தொகுதியாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
4. நான்கு முனை போட்டி :
வடசென்னையில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல், அமமுக வேட்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் வடசென்னை தொகுதியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரங்கராஜ் நிறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதிகாரப்பூர்வ பட்டியல் வரும் 23 ஆம் தேதி வெளியாகிறது.