farmers in varanasi constituency : பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட தமிழகத்தை சேர்ந்த 40 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைப்பெற்று வருகிறது. மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் அஜய் ராய் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இங்கு காங்கிரஸ் குடும்பத்தின் வாரிசான பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் அஜய் ராய் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வாரணாசியில் மோடிக்கு எதிராக 40 தமிழக விவசாயிகள் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயி சங்கங்களின் தலைவர் தெய்வசிகாமணி “ நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், மோடிக்கு எதிராக போட்டியிட உள்ளதாக” கூறினார்.
வாரணாசிக்கு நாளை புறப்பட உள்ள 40 விவசாயிகள் வரும் ஏப்ரல் 29-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேட்பாளருக்கு 10 உள்ளூர்வாசிகளின் கையெழுத்து தேவை என்பதால் அங்குள்ள விவசாயிகளிடம் ஆதரவு கேட்க உள்ளதாக விவசாய சங்கத்தலைவர் பி.கே. தெய்வசிகாமணி தெரிவித்தார்.
மேலும் தங்கள் டெபாசிட் தொகையை செலுத்த பல்வேறு நன்கொடை அளிப்பவர்களிடம் பணம் திரட்டியதாகவும் அவர் தெரிவித்தார். வாரணாசியில் அடுத்த மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், அவர் மீண்டும் பிரதமரானால் நாடு மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து என்ற அடிப்படையிலேயே, அவரை எதிர்த்து விவசாயிகள் போட்டியிடுவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.