தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தொடருமா? அல்லது திமுக புதிய ஆட்சியை அமைக்குமா? என்பது நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள் மூலம் தெரிந்துவிடும். இருப்பினும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இரண்டிலுமே திமுகவே ஆட்சி அமைக்கும் என்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில்
தோயாரமாக திமுகவுக்கு 160 இடங்களும் அதிமுகவுக்கு 70 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளான அமமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளை பொறுத்தவரை சில நிறுவனங்கள் அவர்களில் ஒரு சிலருக்கு ஒற்றை இலக்கங்களில் தொகுதிகள் கிடைக்கும் என்றும் சில நிறுவனங்கள் அதிமுக, திமுக தவிர யாருக்கும் வெற்றி கிடைக்காது என்றும் கணித்துள்ளன.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஒட்டுமொத்தமாக எந்தக் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் என்பதை மட்டும் தெரிவித்துள்ளன. ஆனால், தந்தி டிவி கருத்துக் கணிப்பில் தொகுதி வாரியாக யாருக்கு வெற்றி, எந்தெந்த தொகுதிகளில் கடும்போட்டி போட்டி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாகவே தினகரனின் அமமுக , அதிமுகவிற்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கணிசமான அதிமுக வாக்குகளை அமமுக பிரிக்கும் என கருதப்பட்டது. அதிலும் கட்சியிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கியது, தற்போது வன்னியர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு வழங்கியது, கூட்டணியிலிருந்த கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை விலகியது போன்றவை தென் மாவட்டங்களில் அதிமுக வாக்கு வங்கியை பதம் பார்க்கும் என கூறப்பட்டது. மேலும் தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கக் கூடிய புதிய தமிழகம் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறியது அதிமுகவிற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஒருவேளை கணிசமான வாக்குகளை அமமுக பெற்று அதன் காரணமாக அதிமுக தோல்வி அடைய நேரிட்டால் கட்சி நிலைமை என்ன ஆகும்? கட்சித் தொண்டர்கள் அதிமுகவிலே இருப்பார்களா? அல்லது அமமுகவிற்கு செல்வார்களா? அல்லது தினகரன் மற்றும் சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க சொல்வார்களா? என கேள்விகள் எழுந்தது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பு தான். ஒருவேளை இம்முறை தோற்றால்கூட அடுத்தமுறை ஆட்சிக்கு வர முயற்சிக்கலாம். ஆனால் அதற்கு கட்சி என்ற ஒன்று ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகிய இருவர் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் தான் முடியும்.
இப்படி அதிமுகவின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்து வந்த நிலையில் தேர்தலுக்கு பின் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் அமமுகவால் அதிமுகவிற்கு பாதிப்பில்லை என்பதாக வெளியாகியுள்ளன. சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பின்படி மேற்கு மண்டலத்தை போலவே, தென் மண்டலத்திலும் அதிமுகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் 21 முதல் 23 தொகுதிகள் அதிமுகவுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தென் மண்டலத்தில் அமமுகவுக்கும் 2 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல் தந்தி டிவி கருத்துக் கணிப்பில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் கடும்போட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தென் மண்டலத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வெற்றி பெறுவது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமமுகவால் அதிமுகவிற்கு பெரிய சேதாரம் எதுவுமில்லை எனத் தெரிகிறது. இதனால் அதிமுக தலைமைக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் கட்சிகளின் அடுத்தக் கட்ட நகர்வுகள் தேர்தல் முடிவுகளை பொறுத்தே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.