அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மெகா கூட்டணி உருவாகும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு, இந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக தலைமையில் மெகா கூட்டணி
சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24ம் தேதி பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி அமைக்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே, கூட்டணி குறித்து உறுதி செய்யப்படும், என்று ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் பல கட்சிகள் கூட்டணிக்காக அதிமுகவை அணுகியுள்ளதாகவும், தேர்தலின் போது, ஒரு மெகா கூட்டணியை அதிமுக தலைமை தாங்கும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் மத்திய அமைச்சரும் லோக்சபா தேர்தலுக்கான தமிழக பாஜகவின் பொறுப்பாளராகவும் உள்ள பியுஷ் கோயல் அவர்களை திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் நேற்று சந்தித்துள்ளார். இதனால் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது போலவே மெகா கூட்டணி அமைய அதிக வாய்ப்பு இருக்கிறதா என்ற கோணத்தில் அரசியல் வல்லுனர்கள் பேசி வருகின்றனர்.
Tamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு