தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு நெருங்கிவரும் சூழலில், அதிமுக தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் கோரிக்கை புறம் தள்ளுவதாகவும் பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியலில் இருபெரும் கட்சிகளான ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமைந்த திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் தொடர்கின்றன. அதே போல, அதிமுக கூட்டணியில், பாஜக, பாமக, தேமுதிக, தமாகா தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி இன்னும் உறுதியாகாத நிலைதான் நீடிக்கிறது.
இதனிடையே, அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரிக்கையை ஒப்புக்கொள்பவர்களுடன்தான் பாமக கூட்டணி அமைக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவரும் சென்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்கள் சந்திப்பு குறித்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்ட ராமதாஸ், வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து மட்டுமே பேசப்பட்டது. மற்றபடி அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்று தெரிவித்தார்.
வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து அமைச்சர்களும் முதல்வர் பழனிசாமியிடம் தெரிவித்தனர். டாக்டர் ராமதாஸின் இந்த கோரிக்கை தொடர்பாக இருதரப்பிலும் ஒருமித்த கருத்து உருவாகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக – காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக கட்சிகளின் கூட்டணிக்கு எதிராக அதிமுக ஒரு பலமான கூட்டணியை அமைக்க முயல்கிறது. அதிமுக கூட்டணியில் பலமான கட்சியாக கருதப்படும் பாமகவை கூட்டணியில் இருப்பதை உறுதிப்படுத்த அதிமுக உறுதியாக உள்ளது.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலின்போது அதிமுக வெற்றி பெறுவதற்கு பாமக ஆதரவு வாக்குகள் உதவியாக இருந்தது. அதனால், கூட்டணி ஒப்பந்தப்படி, பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்பட்டது.
அதிமுகவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மின்சாரத்துறை அமைச்ச்ர் தங்கமணி ஆகியோர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். வட தமிழகத்திலும் தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோட்டின் சில பகுதிகளில் வாக்கு வங்கியைக் கொண்ட பாமக உடன் கூட்டணி வைக்க வேண்டியதன் அவசியம் குறித்து டாக்டர் ராமதாஸுடன் கூட்டணி வைத்த அமைச்சர்கள் அதிமுக தலைமைக்கு தெரிவித்திருந்தனர். அதனால், வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் பாமகவை அதிமுக கூட்டணியில் வைத்துக்க்கொள்ள அமைச்சர்கள் பலமுறை ராமாதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பலனாக, அதிமுக பாமக உடனான கூட்டணி இந்த மாதத்திலேயே உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிமுக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது, பாமகவுக்கு 30 – 40 சீட்டுகள் தருவதாக அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அதிமுக மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் ஆர்வத்தை இழந்துள்ளது. இதற்கு காரணம், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெயலலிதாவின் தோழி விகே சசிகலா சிறையில் இருந்து விடுதலையானபோது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது அதிமுக தலைவர்களை எரிச்சலடையச் செய்துள்ளது. இதனால், அதிமுக தலைமை தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்துவதற்கு காரணம் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அதிமுகவை அழைத்திருந்தாலும், ஆளும் அதிமுக தற்போது பாமக உடனான கூட்டணி ஒப்பந்தத்தை உறுடி செய்ய முயற்சிக்கிறது. அதற்குப்பிறகு, மற்ற கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.கே.சசிகலாவுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா வெளிப்படையாக வாழ்த்து தெரிவித்தது அமமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சிய ஏற்படுத்தியது. இதனால், அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி அமைக்காமல் கைவிட்டால், அமமுக தேமுதிகவுடன் கைகோர்க்கும் எல்லா சாத்தியமும் உள்ளது. மேலும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் அதிமுக மற்றும் அமமுக இணைப்பது குறித்த நம்பிக்கையையும் நாங்கள் முன்வைத்து வருகிறோம் என்று அமமுக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
அதிமுக பாமகவுடன் கூட்டணியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பிரேமலதா விஜயகாந்த்தின் கோரிக்கையைப் புறந்தள்ளுவதற்கு அவர் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தது ஒரு காரணம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.