மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்? என பேசப்பட்டிருக்கிறது.
2014 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுக.வுடன் கூட்டணி அமைக்க பாஜக விரும்பியது. ஆனால் ஜெயலலிதா அதை விரும்பவில்லை. அதற்கு காரணம், 2004-ம் ஆண்டு பாஜக.வுடன் கூட்டணி அமைத்து, மொத்த தொகுதிகளிலும் அதிமுக அணி தோற்றது.
இந்த அடிப்படையிலேயே 2019 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி பேச்சு எழுந்த நிலையிலேயே தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சிலர், பாஜக.வுக்கு எதிராக பேசினர். ஆனால் பாஜக தரப்பில் இருந்து இதற்கு பதில் சொல்லாமல் மவுனம் காத்தனர். அப்போதே அதிமுக.வுடன் அணி அமைக்கும் முடிவுக்கு பாஜக வந்துவிட்டது புரிந்தது.
இதை நிரூபிக்கும் விதமாக நேற்று முன் தினம் (14-ம் தேதி) மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னை வந்து அதிமுக.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கினார். நள்ளிரவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் பங்களாவில் 3 மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.
பாஜக தரப்பில் பியூஸ் கோயலுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் அந்தக் கட்சியின் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பியூஸ் கோயல் மத்திய மின் துறை அமைச்சர் பதவியை வகித்தவர் என்ற அடிப்படையில் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணியுடன் அவருக்கு புரிதல் உண்டு. ஏற்கனவே பலமுறை டெல்லி சென்று நிதி ஒதுக்கீடு விவகாரங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து வந்திருக்கிறார் தங்கமணி.
அந்த அடிப்படையில் பியூஷ் கோயலுடன் தங்கமணி தனியாக நீண்ட நேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை தளமாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த பொள்ளாச்சி மகாலிங்கத்தின் பங்களாவை முடிவு செய்ததும் தங்கமணிதான் என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, அதிமுக தரப்பில் 25 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தங்கமணி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தற்போது அதிமுக.வுக்கு 37 எம்.பி.க்கள் இருப்பதால், சிட்டிங் எம்.பி.க்களின் வாய்ப்பை பறித்து கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டியிருப்பதாக விளக்கியிருக்கிறார் தங்கமணி.
பாஜக தரப்பில், ஒரு பேக்கேஜ் முறையாக தங்களுக்கு சீட் வழங்கக் கேட்டிருக்கிறார்கள். வைகோவை தவிர, தங்களின் பழைய (2014-ம் ஆண்டு) கூட்டணிக் கட்சிகள் இன்னமும் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், மொத்தமாக 20 சீட்களை தங்களுக்கு தரும்படியும் கேட்டதாக கூறப்படுகிறது.
அதாவது, பாமக 6, தேமுதிக 6, பாஜக 8 என்ற வகையில் பாஜக.வின் பேக்கேஜ் டிமாண்ட் இருந்ததாம். பாஜக.வின் 8 இடங்களில் புதிய நீதிக் கட்சி ஏ.சி.சண்முகம், கொமதேக ஈஸ்வரன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு தலா ஒரு சீட் வழங்கி தாமரை சின்னத்தில் போட்டியிட வைப்பது பாஜக திட்டம்.
ஆனால் அதிமுக தரப்பில், ‘தேமுதிக.வுக்கு பழைய பலம் இப்போது இல்லை. அவ்வளவு சீட் வழங்கத் தேவையில்லை. நாங்களே பேசி 3 சீட்களில் சம்மதிக்க வைக்கிறோம்’ என கூறியிருக்கிறார்கள். அதிமுக 25, பாமக 5, தேமுதிக 3, பாஜக 4, பு.நீ.க 1, பு.த 1, கொமதேக 1 என ஒரு கூட்டணிக் கணக்கை அதிமுக தரப்பில் அழுத்தமாக கூறியிருக்கிறார்கள்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்காவிட்டாலும், தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்வதில் அவரது பங்கு இருக்க வாய்ப்பிருக்கிறது. ‘பாஜக அணியை அதிமுக விரும்பியதோ, இல்லையோ, கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உட்கார வைத்துவிட்டோம். தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்வதில் எந்தப் பிரச்னைக்கும் வாய்ப்பே இல்லை’ என பாஜக நிர்வாகிகள் தரப்பில் உற்சாகமாக கூறுகிறார்கள்.
பாஜக சொல்கிற எண்ணிக்கைக்கும், அதிமுக சொல்கிற எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் தொகுதி பங்கீடு சுபம் ஆகிவிடும் வாய்ப்பு அதிகம்தான்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.