தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், அடுத்ததாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. ஆனால் திமுக சார்பில் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தோல்வியை தழுவியுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட பவுல் மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் தோல்விக்கு அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் தான் காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது.
ஹரி நாடார், பனங்காட்டு படை கட்சி சார்பாக சுயேச்சையாக ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் சார்ந்துள்ள சமுதாயத்தின் நலனுக்காக தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்த ஹரிநாடார் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். பெரிய அரசியல் கட்சிகளுக்கு இணையாக ராமநாதபுரத்தில் தனது கட்சியின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள ஹெலிகாப்டரில் சென்றார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தற்போது சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா, 3,605 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனிடம் தோல்வியை தழுவியுள்ளார். தேர்தலில் பூங்கோதை ஆலடி அருணா 70,380 வாக்குகளும், மனோஜ் பாண்டியன் 73,985 வாக்குகளும் பெற்றனர். சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் 37,632 வாக்குகளைப் பெற்றுள்ளார். மேலும், நாம் தமிழர் மற்றும் தேமுதிகாவை பின்னுக்கு தள்ளி ஹரிநாடார் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் சங்கீதா 12,436 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரநாத் 2811 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
முன்னதாக முன்னிலை நிலவரங்கள் வெளியானபோது, ஒரு கட்டத்தில் ஹரி நாடார், பூங்கோதை ஆலடி அருணாவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil