டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கை வெளியிட்டார் அதில் விவசாயம் தொடர்பாக முன்னுரிமை கொடுத்து அறிவிப்புகளை செய்திருக்கிறார்.
2019 மக்களவைத் தேர்தலுக்கான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
1. விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், எரிவாயு, ஸ்டெர்லைட் திட்டங்கள், இயற்கையை அழித்து சாலை அமைப்பது உள்ளிட்ட எந்தத் திட்டங்களையும் தமிழகத்தில் அமைக்க விட மாட்டோம்.
2. விவசாயத்தை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க விட மாட்டோம்.
3. ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களுக்கு உரிய பங்களிப்பு கிடைக்க உரிய திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுப்போம்.
4. விவசாய கடன் தள்ளுபடிக்கு நடவடிக்கை எடுப்போம்.
5. மரபணு மாற்றப் பயிர்கள் தமிழகத்தில் நுழைவது தடுத்து நிறுத்தப்படும்.
6. நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க விவசாயிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
7. கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆறுகளை இணைக்க ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் உள்ளேயும் ஆறுகள் இணைப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
8. பேரிடர் மேலாண்மையை மேற்கொள்ள நிரந்தர அமைப்பு ஏற்படுத்தப்படும்.
9. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றப் பாடுபடுவோம். அப்படி மாற்றப்படுவதால் மத்திய அரசு நிதி கிடைப்பதில் சிரமம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம்.
10. மாணவர்கள் நலனுக்காக சென்னையை மையமாகக் கொண்டு ஆணையம் அமைக்கப்படும்.
11. கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துக் கல்லூரிகள், பாலிடெக்னிக்களில் இலவச வைஃபை, கையடக்க கணிணி கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
12. தற்போதைய ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம் அல்லது ரத்து செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.
13. ஏழைக் குடும்பங்களுக்கு எரிவாயு வாங்க மாதம்தோறும் 100 ரூபாய் தமிழக அரசு சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
14. முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
15. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலைகளில் 80 சதவிகித இடங்களை தமிழகத்தை சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
16. ஜாக்டோ, ஜியோ அமைப்பினரின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
17. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
18. கச்சத்தீவை மீட்க அம்மா தொடர்ந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதுடன், அதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்.
19. கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
20. மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போல வேலை இல்லாத இளைஞர்களைக் கொண்டு இளைஞர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்.
21. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பல அம்சங்களை தேர்தல் அறிக்கையாக டிடிவி தினகரன் வெளியிட்டார்.