அமமுக... கழகத்தின் ஹிஸ்டரி பற்றி அனைவருக்கும் தெரியும். நாம் எதுவும் சொல்லத் தேவையில்லை. ஆனால், அக்கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் செயல்பாடுகளால் தான், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அமமுக மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமமுகவுடன் கூட்டணி வைக்க பெரிதாக மற்ற கட்சிகள் விரும்பவில்லை என்பதை ஏற்றுக் கொண்டாலும், தினகரனும் தன்னுடைய பலம் என்ன என்பதை அறிய, வெளிக் காட்ட இந்த தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்து, மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் தனித்து களம் காண்கிறார்.
இந்தச் சூழலில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் நின்று பிரம்மாண்ட வெற்றிப் பெற்ற தினகரன், வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக குக்கர் சின்னத்தை அளிக்கக் கோரி, உச்சநீதிமன்றம் வரை சென்றுப் பார்த்துவிட்டார்.
இறுதி வரை தேர்தல் ஆணையம் பிடி கொடுக்காததால், அமமுகவுக்கு பொதுச் சின்னம் வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, 'பரிசுப் பெட்டகம்' சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் புதுவித சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, அக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில், வேட்பாளர்கள் பெயரையொத்த சுயேட்சை வேட்பாளர்களுக்கு 'குக்கர்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தொகுதி
அமமுக வேட்பாளர் - எஸ்.காமராஜ்(பரிசுப் பெட்டி சின்னம்)
சுயேட்சை வேட்பாளர் - காமராஜ்(குக்கர் சின்னம்)
சாத்தூர் தொகுதி
அமமுக வேட்பாளர் - எஸ்.சி.சுப்பிரமணியம்(பரிசுப் பெட்டி சின்னம்)
சுயேட்சை வேட்பாளர் - சுப்பிரமணியம்(குக்கர் சின்னம்)
பாப்பிரெட்டிபட்டி தொகுதி
அமமுக வேட்பாளர் - டிகே ராஜேந்திரன்(பரிசுப் பெட்டி சின்னம்)
சுயேட்சை வேட்பாளர் - ராஜேந்திரன்(குக்கர் சின்னம்)
அரூர் தொகுதி
அமமுக வேட்பாளர் - முருகன்(பரிசுப் பெட்டி சின்னம்)
சுயேட்சை வேட்பாளர் - முருகன்(குக்கர் சின்னம்)
குக்கரில் இத்தனை மக்கரா?
ஆர்.கே.நகர் வெற்றியில் குக்கர்-ன் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குக்கரை ஒரு பிராண்டாகவே டிடிவி மாற்றியது அசாத்தியமானது. தமிழகத்தை ஆளும் 'இரட்டை இலை'யை தோற்கடித்து, தனிப்பெரும் எதிர் சின்னமான 'உதயசூரியன்'-னின் டெபாசிட்டை காலி செய்தது இந்த குக்கர்.
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த 'குக்கர்' சின்னத்தின் பிராண்ட் வேல்யூவை கருத்தில் கொண்டே, டிடிவி சுப்ரீம் கோர்ட் வரை போராடினார். இப்போது, அமமுக வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த நான்கு தொகுதிகளிலும், வேட்பாளர்களின் பெயரையொத்த சுயேட்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கிய விவகாரத்தை ஆய்வு செய்வதை விட, தொப்பி போய் கிடைத்த குக்கரை விசிலடிக்க வைத்த டிடிவி-க்கு, குக்கர் போய் கிடைத்த பரிசுப் பெட்டியில் ஆட்சியே பரிசாக காத்திருக்கிறது... போங்க தம்பி! என்று நம்பிக்கை வழிய பதிலளிக்கின்றனர் அமமுகவினர்.