அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணியின் தோழமைக் கட்சியான எஸ்டிபிஐ கட்சிக்கு, மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியை ஒதுக்கி திமுகவுக்கு முதல் செக் வைத்திருக்கிறார் டிடிவி தினகரன்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் இரு பெரும் கட்சியான திமுக, அதிமுக தங்களால் முடிந்த அளவிற்கு வலிமையான கூட்டணியை அமைத்துள்ளன. ஆனால், இவ்விரு கட்சிகளுக்கும் பொதுவான ஒரு அச்சுறுத்தலாக இருப்பவர் டிடிவி தினகரன்.
திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை நேற்று வெளியிட்டது. அதில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திமுகவின் 20 தொகுதிகள் குறித்த பட்டியலும் வெளியானது. அதில், மத்திய சென்னை தொகுதியும் ஒன்று.
மத்திய சென்னையைப் பொறுத்தவரை, அது திமுகவின் கோட்டையாகவே இருந்தது. 1996 முதல் 2009 வரை என தொடர்ச்சியாக 13 வருடங்கள் திமுக கையில் இருந்த தொகுதி அது.
ஆனால், கடந்த 2014ல் அதிமுகவின் எஸ்.ஆர்.விஜயகுமார் வென்று பிரேக் கொடுத்தார். அதற்கு ஒற்றைக் காரணம் ஜெயலலிதா எனும் ஆளுமை என்றால் மிகையல்ல!.
இப்போது ஜெயலலிதாவும் இல்லை, கலைஞரும் இல்லை என்ற சூழலில் திமுக, அதிமுக ஒருசேர கன்னி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் சந்தித்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காத சூழலில், எதிர்வரும் மக்களவைத் தேர்தல் திமுகவின் புதிய அத்தியாயத்தை எழுத காத்திருக்கிறது!.
இந்தச் சூழலில் தான், மத்திய சென்னைத் தொகுதியில், ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு வெற்றிப் பெற்ற தயாநிதி மாறனையே திமுக நிறுத்தவிருக்கிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை என்றாலும், மத்திய சென்னை தயாநிதிக்கு தான் என்பது உறுதி!.
இந்நிலையில், அமமுகவின் ஒரே கூட்டணிக் கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னைத் தொகுதியை ஒதுக்கியிருக்கிறார் டிடிவி தினகரன்.
மத்திய சென்னை இஸ்லாமியர்கள் அதிகம் கொண்ட தொகுதி. பொதுவாக, பாஜக எதிர்ப்பு சிறுபான்மையினர் வாக்குகளை பெறும் வகையிலேயே திமுக தேர்தல் வியூகங்களை வகுக்கும்.
அந்த அடிப்படையில் பார்க்கையில், தயாநிதிக்கு எதிராக இஸ்லாமிய இயக்கமான எஸ்.டி.பி.ஐ. கட்சியை மத்திய சென்னையில் களமிறக்கி, திமுகவிற்கு இப்போதே டஃப் கொடுக்க தொடங்கியிருக்கிறார் டிடிவி.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முக்கிய நிர்வாகி பேசுகையில், "ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இருந்தே அமமுகவுக்கு துணையாக இருந்து பயணம் செய்து வருகிறோம். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பிரம்மாண்ட சின்னங்களை பின்னுக்குத் தள்ளி டிடிவி தினகரன் வெற்றிப் பெற்றிருப்பது சாதாரண விஷயமல்ல. அங்கு பெரிய கட்சிகள் எல்லாம் புறக்கணிப்பட்டுவிட்டன.
தினகரனை பொறுத்தவரை இளைஞர்களின் மத்தியில் ஆளுமையாக உள்ளார். அதிமுகவின் தலைமை வெற்றிடத்தை தினகரனை நிரப்புகிறார். முக்கியமாக, சிறுபான்மை மக்கள் தினகரனையே அதிகம் நம்புகிறார்கள்" என்றார்.
இடைத் தேர்தலின் முடிவை வைத்து, மக்களவைத் தேர்தலையோ, சட்டமன்றத் தேர்தலையோ தீர்மானிப்பது என்பது தெளிவான அரசியல் பார்வையாக இருக்க முடியாது என்பது உண்மையாக இருந்தாலும், மத்திய சென்னை தொகுதியைப் பொறுத்தவரை திமுகவிற்கு டிடிவியால் கடும் சோதனை காத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை!.