Three State Polls : வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்த திட்டம் வகுத்து வருகிறது பாஜக. மகாராஷ்ட்ரா, ஹரியானா, மற்றும் ஜார்கண்ட் மாநிலத் தேர்தல்களுடன் 2019 பொதுத் தேர்தலை நடத்த இயலுமா என்ற யோசனையில் இறங்கியுள்ளது பாஜக.
ஒரே நேரத்தில் இந்த தேர்தல்கள் நடத்தப்பட்டால், வெற்றி பெறலாம் என்று அக்கட்சியின் தலைவர்கள் கருதி வருகிறார்கள். ஆனால், மகாராஷ்ட்ரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில், சட்டசபை முடியும் வரை ஆட்சியில் இருக்க முடிவு செய்துள்ளனர் அம்மாநில முதல்வர்கள். ஹரியானா மட்டும் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை அக்டோபருடன் நிறைவடைகிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டசபை டிசம்பரில் முடிவடைகிறது. ஆனால் இறுதி முடிவினை நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா எடுப்பார்கள்.
Three State Polls - சிவசேனா என்ன கூறுகிறது ?
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிவசேனா கட்சி, பொதுத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும், மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அவருடைய ஆட்சி காலத்தை முறையே முடிக்க விரும்புகிறார்.
சிவசேனா கட்சி "இம்முறையும் கூட்டணி அமைந்தால் சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒருங்கே செயல்பட் தயாராக இருக்கின்றோம்" என்று கூறியுள்ளது. பாஜகவும் சிவசேனாவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள விரும்பவில்லை.
சிவசேனா - பாஜக கூட்டணி, 2014 தேர்தலில் 48 தொகுதிகளில் 41 தொகுதிகளை வென்றது. 5 மாதங்கள் கழித்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டனர். 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்ட்ராவில் 122 இடங்களை வென்றது பாஜக. 63 இடங்களில் வெற்றி பெற்றது சிவசேனா.
Three State Polls - ஹரியானாவின் நிலை என்ன ?
தற்போதைய சூழலில் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவு கவனித்து வருகிறது பாஜக. ஹரியானாவில் மனோகர் லால் கட்டால் தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றால் அது சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதுகின்றனர் பாஜகவினர்.
மேலும் படிக்க : ப்ரியங்கா காந்தியின் வருகை தேர்தலில் மாற்றத்தை அளிக்குமா ?