திமுக, காங்கிரஸ் கட்சி என தனது அரசியல் பயணத்தை மேற்கொண்ட நடிகை குஷ்புவுக்கு, 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அதிமுக கூட்டணியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், நடிகை குஷ்புவுக்கு பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார். ஆனால், பாஜக ஆயிரம் விளக்கு தொகுதியில் கு.க.செல்வத்துக்கு வாய்ப்பு அளிக்காமல் குஷ்புவுக்கு வாய்ப்பு அளித்தது.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நட்சத்திர வேட்பாளராக போட்டியிட்டுள்ள நடிகை குஷ்பு இந்த தேர்தலில் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை குஷ்புவை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் எழிலன் போட்டியிட்டுள்ளார். பெரியார் கொள்கைகளையும் அம்பேத்கர் சிந்தனைகளையும் இளைஞர்கள் மத்தியில் பிரசாரம் செய்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எழிலன் களத்தில் பலமாக உள்ளார். அதே நேரத்தில், பாஜக வின் நட்சத்திர வேட்பாளர் குஷ்பு இங்கே பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளார். ஆயிரம் விளக்கு தொகுதியில் முக்கிய வேட்பாளர்களான குஷ்பு, டாக்டர் எழிலன், இவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வில்லியம்ஸ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கே.எம்.சரீப், அமமுக சார்பில் வைத்தியநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரீன் உள்பட 20 வேட்பாளர்கள் தேர்தலில் களம் கண்டுள்ளனர்.
ஆயிரம் விளக்கு தொகுதி கடந்த காலங்களில் திமுகவின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. 2006 சட்டமன்றத் தேர்தல் வரை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி தோல்வி எதுவந்தாலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதை தனது சொந்த தொகுதியாகவே நினைத்து போட்டியிட்டுவந்தார். அதனால், திமுகவின் பலம், களத்தில் வலிமையாக நிற்கும் டாக்டர் எழிலனின் வலிமை என எல்லாவாற்றையும் தாண்டி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கில் பிரகாசிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், வாக்கு எண்ணிக்கை 2வது சுற்றில் திமுக வேட்பாளர் எழிலன், பாஜக வேட்பாளர் குஷ்புவைவிட 2000 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன், பாஜக வேட்பாளர் குஷ்புவைவிட 27,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
ஆயிரம் விளக்கு தொகுதியில் இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 71,537 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு 38,493 வாக்குகள் பெற்றார். இதன்மூலம், 33,044 வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் எழிலன் வெற்றி பெற்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”