Ravish Tiwari, Raj Kamal Jha
BJP President Amit Shah Exclusive Interview : நாடு முழுவதும் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இந்தியா முழுவதும் சுமார் 96 இடங்களில் பிரச்சாரங்கள் மேற்கொண்டுள்ளார் அமித் ஷா. இந்த வாரத்தில் 100வது பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். குஜராத் செல்லும் போது இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி
2014 பிரச்சாரத்திற்கு சென்ற அமித் ஷாவிற்கும் 2019ம் ஆண்டு பிரச்சாரத்திற்கு செல்லும் அமித் ஷாவிற்கும் இருக்கும் வேறுபாடுகள் ?
2014ல் மோடியின் பெயர் மட்டும் இருந்தது. இன்று மோடியின் பெயரும் சாதனையும் இருக்கிறது. 2014ல் மோடி மீது நம்பிக்கை மட்டும் இருந்தது. இன்று நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருக்கிறது.
1971ல் வங்கதேச போருக்கு முன்பு, 1977ல், எமெர்ஜென்சிக்கு பிறகு, 1989 - போஃபர்ஸ் ஊழல், 2004 ஷைனிங் இந்தியா என்ற பெயரில் நடைபெற்ற தேர்தல் போல் இந்த தேர்தலும் அமையுமா ?
1960களில் இருந்து நடைபெறும் தேர்தல் அனைத்தும் பெரும்பாலும் நாட்டில் என்ன நடந்தது என்பதை கருத்தில் கொண்டு நடைபெறவில்லை. ஒரு தேர்தல் வங்கதேச போர் சூழலின் நிழலில் நடைபெற்றது. மற்றொன்று எமெர்ஜென்சி, பிறிதொன்று கார்கில். முதல்முறையாக ஜனநாயகத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை கருத்தில் கொண்டு தேர்தல் நடைபெறுகிறது.
முக்கியத்துவம் ஏன் சிறந்த நிர்வாகத்தில் இருந்து பாகிஸ்தான் மீதும் தேசப்பற்று மீதும் மாறியது?
பிரச்சனை பாகிஸ்தான் பற்றியது இல்லை. தேசிய பாதுகாப்பு பற்றியது. பாகிஸ்தான் பிரச்சனையை தேசிய பாதுகாப்போடு ஒப்பீடுபவர்களின் அறிவை தான் வியக்க வேண்டியது இருக்கிறது. ஒவ்வொரு ஜனநாயகத்திலும் தேசப்பற்று மிக முக்கியமான ஒன்றாகும். தேர்தலில் தேசப்பற்று பேசுவதில் என்ன தவறு இருக்கிறது ?
தேசிய பாதுகாப்பு குறித்து
தேசிய பாதுகாப்பு என்பது உணர்வுப்பூர்வமான பிரச்சனை இல்லை. உண்மையான பிரச்சனை. வெகுநாட்களாக நாம் தேசிய பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. வெளிநாட்டுக் கொள்கைகளில் ஒன்றாகவே இருந்த பாதுகாப்புக் கொள்கைகளை மோடி மாற்றியுள்ளார். பாதுகாப்புக் கொள்கைகளுக்கு அதி முக்கியத்துவம் அளித்துள்ளார்.
வாஜ்பாய் ஆட்சியில் பொக்ரான், தேசிய நெடுஞ்சாலைகள், டெலிகாம் மற்றும் மின்சாரத்துறையில் வளர்ச்சி... மோடியின் ஆட்சியில் ?
11வது இடத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை 6வதிற்கு உயர்த்தியுள்ளோம். தேசிய பாதுகாப்பினை எல்லையில் பலப்படுத்தியுள்ளோம்.
மேக்ரோ எக்னாமிக்ஸை உயர்த்தி, 50 கோடி மக்களின் வாழ்வை மாற்றியுள்ளோம். நீங்கள் இரண்டு ஆட்சிகளின் 5 ஆண்டு திட்டங்களை ஒப்பிடுகின்றீர்கள். நானோ எங்களின் 5 ஆண்டு ஆட்சியை 55 ஆண்டு கால காங்கிரஸுடன் ஒப்பிடுகின்றோம்.
காங்கிரஸ் நாட்டில் உள்ள ஏழை எளியவர்களுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கவில்லை. 70 ஆண்டுகளில் 13 கோடி தான் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஆட்சி செய்த 5 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டியுள்ளோம்.
அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிட வசதி. 11 கோடி வீடுகளில் 8 கோடி என்ற இலக்கை அடைந்துள்ளோம். 2022ல் 11 கோடி என்ற இலக்கை எட்டுவோம். 2022ல் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். மருத்துவக்காப்பீடு 50 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி மூலமாக நாடு முழுவதும் ஒரே வரித் திட்டம். 5 ஆண்டுகளில் நாங்கள் மிக முக்கியமான 30 முடிவுகளை எடுத்துள்ளோம்.
இத்தனை திட்டங்கள் கொண்டு வரப்பட்ட பின்பும், கடந்த ஆண்டு நடைபெற்ற 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு, பி.எம். கிசான், வருமான உச்சவரம்பு மாற்றம், ஒழுங்குபடுத்தப்படாத பிரிவுகளில் வேலை பார்ப்போருக்கு ஓய்வூதியம் என அறிக்கவிட்டது ஏன் ?
நீங்கள் ஒரு பத்திரிக்கையாளராக பார்க்கின்றீர்கள். நிர்வாகத்தின் பார்வையில் இருந்து பாருங்கள். 6% மாக இருந்த நிதிபற்றாக்குறை 3.5%மாக குறைக்கப்பட்டுள்ளது. வருமானவரி மூலமாக பெறப்படும் வருவாய் அதிகரித்துள்ளது. நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் உச்ச வரம்பில் மாற்றம் கொண்டு வந்தோம்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது அரசியல்சார் முடிவு அல்ல. அது சமூகத்திற்கான முடிவு. எங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக்கு பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனை தேர்தலோடு தொடர்புபடுத்தக் கூடாது. தேர்தலுக்காகத்தான் என்றால், நாங்கள் சட்டசபை தேர்தலுக்கு முன்பே செய்து மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றிருப்போம்.
PM-KISAN - திட்டம் பற்றி ? நாட்டின் நிதிநிலைமை நன்றாக இருக்கும் போதும், நீங்கள் ஏன் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி உத்தரவிடவில்லை. தோல்வி அடைந்த பிறகு PM-KISAN திட்டம் பற்றி பேசுகின்றீர்கள் ?
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது நிதி ஆயோக். 15 கோடி விவசாயிகள் இருக்கும் நாட்டில் 3 கோடியினர் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயனடைகின்றனர். பலரோ கடன்களை அருகில் வாங்கிக் கொள்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 1 ஏக்கருக்கும் குறைவான அளவே நிலம் வைத்திருப்பவர்கள். NABARD வங்கி, இந்த அளவு நிலத்திற்கு போடப்படும் இடுபொருட்களுக்கான மதிப்பினை கணக்கிட்டது. அது 3000 ரூபாய் மட்டுமே. அதனால் தான் காரிஃப் பருவம் மற்றும் ராபி பருவம் என இரு பருவத்தை கணக்கில் கொண்டு 6000 ரூபாய் நிதி அளிப்பதாக அளிக்கப்பட்டது. 6000 ரூபாய் என்பது வாக்கு வங்கியை அதிகரிக்க அல்ல.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பின்னடைவை உணர்கின்றீர்களா ?
பின்னடைவு என்பது இல்லை. 15 வருடங்கள் மத்தியப் பிரதேசத்திலும் 10 வருடங்கள் ராஜஸ்தானிலும் ஆட்சி நடத்தியுள்ளோம். மேலும் 1.5 லட்சம் வாக்குகள் என்ற வித்தியாசமே. இங்கு நாங்கள் வாக்கு வங்கிகளை இழந்துவிடவில்லை. பாஜகவின் நிலையை இம்மூன்று மாநிலங்களிலும், மக்களவை தேர்தலில் மீட்டெடுப்போம்.
பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி குறித்து ?
10 வருடங்களில் உ.பி. மக்களும் நிலையும் வேறுபாடு அடைந்துள்ளது. இப்போது, வாக்காளர்கள் யாரும், அவர்கள் தலைவர்களின் பிணைக்கைதிகளாக இருப்பதில்லை. கடந்த தேர்தலைப் போலவே 73ஐ நிச்சயம் கைப்பற்றுவோம். 74 தொகுதிகளில் வெற்றி என்றாகுமே தவிர 72 என்று குறையாது.
அப்படியென்றால் இதுவரை நடைபெற்ற 16 தொகுதிகளிலும் வெற்றி பெறுவீர்கள் அப்படியா ?
தொகுதிவாரியாக செல்ல வேண்டாம். உபியில் 74 தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
மிகவும் நம்பிக்கையாக பேசுகின்றீர்கள் ?
325 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 73 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இதே நிலைப்பாடு தான்.
தேசியவாதம் நாட்டின் ஜனநாயகத்தில் முக்கியமான ஒன்று தான். ஆனால் தேசியப் பற்று என்பதற்கு சான்றளிக்கும் ஸ்தாபனமாக பாஜக மாறும் விதம் வருத்தம் அளிக்கின்றது. மதசார்பற்ற தன்மைக்கு இடதுசாரிகள் சான்றளிக்கின்றார்களா என்று நீங்களே கேள்வி கேட்டவர்கள் ?
நிச்சயமாக இல்லை. பாரத் தேரே துக்குடே ஹோங்கே என்று பாடுபவர்கள் தேசிய பற்றாளர்கள் இல்லை. அவர்களை ஆதரிப்பவர்களும் தேசிய பற்று கொண்டவர்கள் இல்லை. ஒரு மிகப்பெரிய நாடு தேசியப்பற்று இல்லாமல் எப்படி இருக்க இயலும். இதைப் பற்றி விவாதம் நடத்தவும் நான் தயார். நாங்கள் கூறும் வகையில் இருப்பவர்கள் தான் தேசியவாதிகள் என்று கூறவில்லை. ஆனால் பாரத் தேரே துக்குடே ஹோங்கே என்று கூறுபவர்கள் நிச்சயம் தேசியவாதிகள் கிடையாது. இதை சொல்ல எனக்கு ஜனநாயக உரிமை உண்டு.
அப்படி கூறுபவர்கள் இந்த நாட்டில் வாழும் உரிமையற்றவர்கள் என்று யார் கூறுகின்றனர் ?
நான் அப்படி ஒன்றும் கூறவில்லை. ஆனால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்.
சாத்வி பிரக்யா தாக்கூரை தேர்தலில் நிறுத்துவது குறித்து ?
அதில் என்ன தடை இருக்கிறது. அவர் இந்த நாட்டு பிரஜை இல்லையா இல்லை அவருக்கு தேர்தலில் நிற்கும் தகுதி தான் இல்லையா. இந்து தீவிரவாதம் என்று கூறி நாடு முழுவதும் ஒரு பிரச்சாரத்தையே நடத்தியுள்ளது காங்கிரஸ். நம்மை கடிக்கும் எறும்புக்கும் உணவு தரும் நாடு இது. ஆனால் சாதுகள் மீது தேவையற்ற புகார்களை அளிக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
சம்ஜௌத்தா வழக்கில் கைதானவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர். நீதிமன்றமோ போதிய ஆதாரம் இல்லை என்று கூறிவிட்டது. உண்மையான குற்றவாளிகள் வெளியில் நடமாடுகின்றார்கள். வழக்குகள் மேல் வழக்குகள் என நீதிமன்றங்களில் நிறைய ஊடகங்கள் அமைதியாக இருக்கின்றன. மதசார்பற்றவர்கள் அமைதியாக இருக்கின்றனர்.
UAPA-வின் கீழ் விசாரணையில் இருக்கிறார் தாக்கூர்
இந்து தீவிரவாதம் என்பதை ஒரே ஒரு சந்திப்பின் கீழ் உருவாக்கப்பட்டது. ஆனால் இரண்டு நீதிமன்றங்களும் அப்படி ஒரு சந்திப்பு நடைபெற்றதாகவே கூறவில்லை. வழக்காடுமன்றங்களுக்கு என்று நேரங்கள் இருக்கின்றது. ஆனால் அப்படி ஒரு சந்திப்பு நடைபெற்றது என்று இரு வழக்குகளிலும் கூறப்பட்டதை நிராகரித்துவிட்டனர்.
வயநாட்டில் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து, இது இந்தியர்களா பாகிஸ்தானியர்களா என்று கேட்டதன் நோக்கம் ?
அப்படி ஒன்றும் கேட்கவில்லை. அங்கு வந்திருக்கும் மக்கள் குறித்து ஒன்றும் நான் கூறவில்லை. ஊர்வலம் பற்றி தான் குறிப்பிட்டேன். உங்களுக்கு தெரியும் அது இந்தியா தான் என்று. மேலும் அங்கிருப்பவர்கள் அனைவரும் இந்தியர்கள் தான்.
பாஜகவிற்கு வாக்களிப்பவர்களுக்கு கூற எதுவும் இல்லை. பாஜகவிற்கு வாக்களிக்காதவர்களின் தேசப்பற்று குறித்து ?
பாஜகவிற்கு வாக்களிக்காதவர்கள் அவர்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களிக்க உரிமையுண்டு. பாஜகவிற்கு வாக்களிக்களிப்பவர்கள் மட்டும் தான் உண்மையான தேச பக்தர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் ஒரு இடத்தில் இருந்து போட்டியிடுகிறார் ராகுல் காந்தி. அதனால் என்ன பிரச்சனை ?
ராகுல் காந்தி சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதியில் போட்டியிடுகிறார். அதில் எந்த தடையும் பிரச்சனையும் இல்லை. மத்தியிலும் மாநிலத்திலும் நாங்கள் ஆட்சி செய்கின்றோம். இஸ்லாமியர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் குறித்து ஏதாவது ஒரு வழக்கு உண்டா ?
பசு பாதுகாவலுக்காக நடக்கும் வன்முறைகள் !
பசுக்களை பாதுகாப்பதில் என்ன பிரச்சனை ?
பசு பாதுகாவல் என்று இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ?
மாப் லாஞ்சிங் என்பது லா அண்ட் ஆர்டர் பிரச்சனை. முந்தைய ஆட்சிக்கும் இன்றைய ஆட்சிக்கும் இடையே அதிக வேறுபாடுகள் இல்லாமல் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த பிரச்சனைகள் நடைபெறும் போது அதை நாங்கள் மேம்போக்காக எடுத்துக் கொள்வதில்லை. 302 பிரிவு அனைத்து வழக்குகளிலும் போடப்பட்டது. மூன்று வழக்குகளில் தண்டனைகள் தரப்பட்டுள்ளன.
காஷ்மீர் இஸ்லாமியர்கள் தேசபற்று கொண்டவர்கள் அல்ல... நாம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ?
அப்படி நாங்கள் கூறியதாக ஒரு அறிக்கையை உங்களால் காட்ட இயலுமா ? ந்நாங்கள் தீவிரவாதத்தை மேம்போக்காக எடுத்துக் கொள்ள மாட்டோம். எங்கும் எப்போதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக என்றோ, காஷ்மீர் மக்களுக்கு எதிராக என்றோ எப்போதும் கூறியதில்லை. தீவிரவாதத்திற்கு எதிராக என்று தான் கூறினோம். நீங்கள் ஏன் காஷ்மீர் மக்கள் என்று நினைக்கின்றீர்கள் ?
ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்ற மாநிலங்கள் போல் அல்லாமல், சிறப்புமிக்கதாக உள்ளதாக நினைக்கின்றீர்களா ?
மற்ற மாநிலங்களைப் போல் தான் ஜம்மு&காஷ்மீரும். சிறப்பு என்று கூறுவதை தவறு என்கின்றேன்.
எந்த மாநிலத்திலும் மக்களுக்காக இருமுறை தான் தேசிய நெடுஞ்சாலைகள் இயங்கும் என்ற விதிமுறை இல்லை ?
ஜம்மு மற்றும் காஷ்மீர் எல்லையோர மாநிலம்... அதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜாட், பட்டிதார், மரத்தா மக்களின் போராட்டங்களை கருத்தில் கொண்டு பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு என்று கூறினீர்கள். ஒவ்வொரு நாளும் அரசு தேர்வுக்காக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது குறித்து ?
இந்த பிரச்சனைகளை வேறு மாதிரியாக அடையாளப்படுத்த முயன்றோம். திறன், கடன் வசதி மற்றும் பொருளாதார வளர்ச்சி. ஒரு நாட்டில் 125 கோடி அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது கடினம். அதனால் நாங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கினோம். சாலைகள் உருவாக்கம், ரயில்வே வேலை, கழிவறைகள் கட்டுதல் என்று ஒவ்வொன்றாய் முன்னெடுத்தோம். ஒரு லட்சம் கிராமங்களுக்கு நாம் இணைய வசதி கொடுக்க திட்டம் மேற்கொண்டால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
வெளியான டேட்டாவிற்கும் நீங்கள் கூறும் கணக்கிற்கும் வித்தியாசம் உள்ளது. மக்கள் மத்தியில் டேட்டா வெளியானது குறித்து.
NSSO job survey-ஐ நாங்கள் தடுத்து நிறுத்தவில்லை. புள்ளியல் விபரங்கள் தரும் வல்லுநர்களுக்குள் குழப்பம். அதைப் பற்றி நான் எதுவும் அறியவில்லை.
பாஜக தொண்டர்கள் மோடி மோடி மோடி என்கின்றார்கள் ? பிரச்சாரத்திற்கு வரும் அமித் ஷா முதல், ஏன் மோடியே மோடி என்று கூறிதான் பிரச்சாரம் செய்கின்றார் ?
காங்கிரஸாரும் தான் ராகுல் ராகுல் ராகுல் என்று கூறுகிறார்கள். ஆனால் வாக்குகள் எங்கே ? மக்கள் நம்பிக்கைக்குரியவர்களுக்குத் தான் வாக்களிக்கின்றார்கள். பேரைத் தாண்டியும் மக்கள் அந்த பேருக்கு பின்னால் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்றார்கள்.
மோடி ஒரு டீக்கடைக்காரர் என்று கூறி வாக்கு சேகரிக்கின்றீர்கள் ... ஆனால் லால் பகதூர், சரன் சிங், வாஜ்பாய், மன்மோகன் போன்றோர்களும் எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான்.
எங்களுக்கு தோன்றுகிறது, நாங்கள் இதை கூற வேண்டும் என்று. என்னுடைய கட்சிக்கு தெரியும் எப்படி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று !
மேலும் படிக்க : மோடியோ, ராகுலோ உங்கள் தொகுதிக்கு வேலை செய்யப் போவதில்லை- பிரகாஷ் ராஜ் சிறப்பு பேட்டி
இந்தியாவில் என்ன பிரச்சனை நடந்தாலும் 55 ஆண்டு குடும்ப அரசியலும், நேரு குடும்பமும் தான் காரணம் என குறிப்பிடுவது ஏன் ?
கேட்கப்படும் கேள்விகளுக்குத் தான் நான் பதில் அளிக்கின்றேன். நான் எங்கும் அவ்வாறு குறிப்பிடவில்லை.
வாஜ்பாய் கூட்டணி கட்சிகளை நடத்திய விதம் போல் மோடி - ஷா தலைமை, டிடிபி, பிடிபி, சிவசேனா கூட்டணிகளை நடத்தவில்லை என்ற சந்தேகம் வருகின்றது.
நாங்கள் 5 வருடம் ஆட்சி நடத்துகின்றோம். தெலுங்கு தேசம் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் எங்களிடம் இருந்து பிரிந்து செல்லவில்லை. பிடிபி கட்சியிடம் இருந்து நாங்கள் தான் விலகினோம்.
எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றோருக்கு டிக்கெட் வழங்காதது குறித்து ?
அத்வானிக்கு மட்டுமல்ல்ல 18 நபர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்கள் 75 வயதை கடந்ததால் இம்முடிவு.
கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்களை என்றும் எதிரிகள் என்றோ, தேச துரோகிகள் என்றோ நாங்கள் என்றும் கூறியதில்லை - என்று எல்.கே. அத்வானி கூறியது பற்றி ?
நாங்கள் தனி நபர்கள் யாரையும் தேசத்துரோகிகள் என்று வரையறுப்பதில்லை. அவர்களின் செயலைத்தான் தேசத்திற்கு எதிரானது என்று கூறினோம். ராணுவ தளபதியை ரௌடி என்று அழைக்கும் பட்சத்தில் அதனை தேசத்துரோக செயல் என்று தான் வரையறுப்போம்.
நீதித்துறை, ஊடகம், ஆர்.பி.ஐ - போன்ற அமைப்புகள் இன்று பாதுகாப்பாக உள்ளதா ?
நிச்சயமாக! எங்காவது இதுவரை தாக்குதல் நடைபெற்றுள்ளதா?
நான்கு நீதிபதிகள் முதன்முறையாக, நீதித்துறையில் அரசியல் அழுத்தங்கள் இருப்பதாக கூறியது குறித்து !
அப்படி அவர்கள் எதுவும் கூறவில்லை. அவர்கள் தலைமை நீதிபதி பற்றி தான் பேசினார்கள். அரசைப் பற்றி அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
தலைமை நீதிபதி வெளியாட்களின் நிர்பந்தனைகளுக்கு உட்படுகிறார் என்றும் அந்த வெளியாட்கள் அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் என்றும் கூறினார்கள்.
இது குறித்து செல்லமேஷ்வரிடம் கேளுங்கள். நீதித்துறையில் ஒரு போதும் அரசின் தலையீடு இருந்ததில்லை. அவர்களுக்குள்ளான பிரச்சனையை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆர்.பி.ஐ குறித்து ? இரண்டு ஆர்.பி.ஐ ஆளுநர்களும் அவர்களின் விருப்பம் காரணமாகவா விலகினார்கள் ?
ஆர்.பி.ஐக்குள் என்ன நடைபெற்றதோ, அது முழுவதும் ஆர்.பி.ஐ ஆக்ட்-டிற்குள் நடைபெற்றது. அதைப்பற்றி நாங்கள் விவாதிக்க கூடாதா ? பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு யார் பதில் கூறுவது ? நிதி அமைச்சர் அதற்கு பொறுப்பாகமாட்டாரா ? ஆர்.பி.ஐ, சட்டத்தை கிழித்து குப்பையில் போட்டுவிடலமா ? லெஜிஸ்லேசனுக்கு கீழே வரும் சுதந்திர நிர்வாகத் தன்மை முக்கியம் தான். பாராளுமன்றமும் கூட தனித்து இயங்கக் கூடியது தான் ஆனால் அதனை வழி நடத்தும் பொறுப்பு சபாநாயகரின் கையில் உள்ளது.
ஆனால் ஆஃப்செட் காண்ட்ராக்ட் அதனிடம் தானே இருக்கிறது ?
30 நிறுவனங்களிடம் ஆஃப்செட்ஸ் சென்றுள்ளது. யார் யார் எவ்வளவு பிசினஸ் அதில் இருந்து பெறுவார்கள் என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
பேர ஒப்பந்தம் தொடர்பாக உருவாக்கப்பட்ட நெகோசியேட்டிங் டீமில் 3 நபர்களின் எதிர்ப்பு குறித்து ? பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இருந்தத்தா?
இந்த முழு வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அதுகுறித்து கருத்து ஏதும் கூறுவதற்கில்லை. பாதுகாப்புத் துறையின் கொள்முதல் விதிகளுக்கு உட்பட்டு தான் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
தலித்துகள் நலனிற்காக மோடி எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் ஏப்ரல் 2 போராட்டம், பீமா கோரேகான் போராட்டங்கள் பாஜக - இந்த சமூகத்தின் நல்லிணக்கத்திற்கு வெகு தூரம் பயணிக்க வேண்டும் என்பதை காட்டுகிறதா ?
பாஜக என்று இல்லை... இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள முயற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால் போராட்டங்கள்
அனைத்து கட்சியிலும் தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் போராட்டங்களை தொடங்குகின்றனர். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை காத்திருங்கள். நிச்சயமாக அனைத்து தலித் தொகுதிகளிலும் பாஜக நிச்சயம் வெற்றி பெரும்.
பாஜக - இஸ்லாமியர்கள் - நம்பிக்கையின்மை அதிகம் இருப்பதாக கூறப்படுவது குறித்து ?
நான், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் வேண்டிக் கொள்கின்றேன் இந்த தூரத்தை நம்பிக்கையின்மையை நீங்கள் குறைக்க வேண்டும் என்று ! ஊடகங்கள் நினைத்தால் இந்த இடைவெளியை நீங்கள் 2, 5, அல்லது 10 வருடம் என எந்த காலக்கட்டத்திலும் குறைக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.