இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதி கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் தாமரை மலரும் என்று பாஜகவினர் கூறி வரும் நிலையில், பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தனி தொகுதியில் மலரச் செய்வாரா? அல்லது திமுக தாராபுரம் தொகுதியை மீண்டும் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேசிய எஸ்.சி, எஸ்டி ஆணையத்தின் தலைவராக இருந்த எல்.முருகன், யாரும் எதிர்பாராத வகையில் பாஜக தேசியத் தலைமையால், தமிழக பாஜக தலைவராக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டார். பட்டியல் பிரிவில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவரான எல்.முருகனை பாஜக தலைவராக அறிவித்திருப்பது, பட்டியல் பிரிவினரில் ஒரு பகுதியினரின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவும், கட்சியில் பட்டியல் இனத்தவருக்கு இதுவரை முக்கிய பொறுப்புகளை அளிக்காத திமுக, அதிமுகவுக்கு இதன் மூலம் பட்டியல் இன மக்களிடம் இருந்து அழுத்தம் கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்று அப்போது விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
தமிழக பாஜக தலைவரான எல்.முருகன், வேல் யாத்திரை மூலம் பாஜவை ஊடகங்களில் பரபரப்பாக பேச வைத்தார். ஆனால், இந்த வேல் யாத்திரை பரபரப்பு எல்லாம் பாஜகவுக்கு தேர்தலில் உதவுமா என்றால் அது குறித்து பாஜகவிலேயே இருவேறு கருத்துகள் உள்ளன.
இந்த சூழலில்தான், பாஜக தலைவர் எல்.முருகன் இந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தனித்தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளைப் பெற்றுள்ளது. அமையவிருக்கும் சட்டப்பேரவையில் எப்படியாவது பாஜக உறுப்பினர்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று பாஜக தலைமை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்ட 30 தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர்.
இதனால், எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தனித் தொகுதி இந்த சட்டமன்றத் தேர்தலில் கவனம் பெற்றுள்ளது. தாராபுரத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக தலைவர் எல்.முருகனை எதிர்த்து திமுக சார்பில், கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். இந்த இரு வேட்பாளர்களுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தாராபுரம் தொகுதியில் இதற்கு முன்பு எந்தெந்த கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. எந்த கட்சி அதிகமுறை வெற்றி பெற்றுள்ளது. தாராபுரம் தொகுதியில் வாக்காளர்கள் பின்னணி, தாராபுரம் யாருக்கு சாதகமாக இருக்கும்? தொகுதி நிலவரம் ஆகியவற்றைப் பற்றி ஒரு அலசல் பார்வை இங்கே.
தாராபுரம் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் கட்சி 3 முறைகளும் திமுக, அதிமுக தலா 5 முறைகளும் பாமக 1 முறையும் சுயேச்சை 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த பொன்னுசாமி 25,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, வந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.எஸ்.காளிமுத்து சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில், தாராபுரம் தொகுதியில் முதல்முறையாக பாஜக சார்பில் அக்கட்சியின் பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதியில் கணிசமாக 30-40 ஆயிரம் வாக்குகள் இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளது. பாஜக மீது இஸ்லாமியர்களுக்கு அதிருப்தி உள்ளதால் இந்த வாக்குகள் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறது. மேலும், ஏற்கெனவே இருக்கிற திமுக வாக்குகளும் பொதுவான வாக்குகளும் திமுகவை பெரிய அளவில் வெற்றி பெறச் செய்யும் என்று திமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.
அதே போல, தாராபுரம் தொகுதியில் குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான வாக்குகள் பாஜக ஆதரவு வாக்குகள் உள்ளதாக கூறும் பாகவினர், இதுவரை தாராபுரம் தொகுதியில் காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் மாற்றத்திற்காக பாஜகவை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், தாராபுரம் தொகுதியில் திமுகவே மற்ற கட்சிகளுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கணிப்புகளையெல்லாம் தாண்டி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தான் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் தாமரையை மலரச் செய்வாரா? என்பதை தேர்தல் முடிவுகளே உறுதி செய்யும் என்பதால் தேர்தல் முடிவு வெளியாகும் மே 2ம் தேதி வரை காத்திருப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.