தற்போது தெலங்கானா ஆளுநராக இருக்கிற தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்த காலத்தில் இருந்தே தமிழகத்தில் தாமரை மலரும் என்ற கோஷங்கள் ஒளித்து வந்தன. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் 2 மக்களவைத் தேர்தல் ஒரு சட்டமன்றத் தேர்தல் என 3 தேர்தல்களிலும் பாஜகவால் தமிழகத்தில் கால் பதிக்க முடியவில்லை. 2014 மக்களவைத் தேர்தலில் மட்டும் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் பாஜக மலந்தே தீரும் என்று பாஜகவினர் சொல்லும்போது அவர்களுக்கு எதிராக எழுந்த கேலி, கிண்டல்கள் எல்லாவற்றுக்கும் பதிலடியாக, நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் முன்பும் பின்பும் பிரதமர் மோடி 4 முறை தமிழகம் வந்தார். அதன் பலனாக 4 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 21 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. 2001ம் ஆண்டு தேர்தலுக்கு பின் அமைந்த தமிழக சட்டப் பேரவையில் பாஜக சார்பில் 4 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதே தமிழகத்தில் பாஜகவின் முதல் வெற்றி. இதற்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவில், பாஜக சார்பில் 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவைக்கு செல்கிறார்கள்.
இதற்கு இடையே, 2006, 2011, 2016 ஆகிய 3 தமிழக சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு கோவை தெற்கு, திருநெல்வேலி, நாகர்கோவில், மொடக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் வேற்றி பெற்றுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் போட்டிட்ட பாஜகவின் தேசிய மகளிர் அணி பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் தோல்வியடைந்தனர். அதே போல, பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்றார். நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் தோல்வியடைந்தார். அதே போல, மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வியடைந்தார்.
வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி ஆகிய 4 எம்.எல்.ஏ.க்களும் அமையவுள்ள தமிழக சட்டப் பேரவையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக எம்.எல்.ஏ.க்களாக இடம்பெறுகிறார்கள். தமிழக சட்டப் பேரவையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 4 தாமரைச் சின்ன எம்.எல்.ஏ.க்கள் மலர்ந்துள்ளார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”