திமுக தொகுதி பொறுப்பாளர்கள்: திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தொகுதி பொறுப்பாளர்களை திமுக நியமித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 ம் கட்டத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி தேர்தல் நேற்று (18.4.19) நடைப்பெற்றது.
அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்படமால் இருந்தது. இந்த நிலையில் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து சூலூர் தொகுதியும் காலியானது.
இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி சென்னை வந்த இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிக்கும் இடைத்தேர்தல் 7 கட்டத்தில் ஏதாவது ஒரு தேதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து பரிசீலனை செய்து, ‘தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் வெளியிட்டார். இதில் சூலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, அரவக்குறிச்சியில் வி.செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் பி.சரவணன், ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் எம்.சி.சண்முகையா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டனர்.
'தலைமைக் கழக அறிவிப்பு'
நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கழகப் பொறுப்பாளர்கள் - உறுப்பினர்கள் விவரம்: 1/2 pic.twitter.com/ZySU0ftkjh
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) 19 April 2019
இந்நிலையில், இன்று இந்த 4 தொகுதிகளிலும் திமுக சார்பில் தேர்தல் பணிகளை கவனிக்கும் தொகுதி பொறுப்பாளர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஒட்டப்பிடாரம் தொகுதி- கே.என்.நேரு தலைமையில் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அரவக்குறிச்சி தொகுதி- பொன்முடி, செந்தில்பாலாஜி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சூலூர் தொகுதி-எ.வ.வேலு, தென்றல் செல்வராஜ், ஆ.ராசா உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமனம். திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர்கள் இ.பெரியசாமி மணிமாறன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
'தலைமைக் கழக அறிவிப்பு'
நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கழகப் பொறுப்பாளர்கள் - உறுப்பினர்கள் விவரம்: 2/2 pic.twitter.com/ZG9oKEkQF7
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) 19 April 2019
4 தொகுதிகளுக்கு வருகிற 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஏப்ரல் 29ம் தேதி. 30ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். மே 2ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து மே 19ம் தேதி வாக்குப்பதிவும், 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.