தமிழக சட்டமன்றத் தேர்தலில் செய்யூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட இ.வி.எம் இயந்திரங்களை உத்திரமேரூர் அருகே வாக்கு எண்ணிக்கைக்காக வைக்கப்பட்டுள்ள அறையில் இண்டெர்நெட் மோடம் இருப்பது ஏன் என்று கேட்டு விசிக வேட்பாளர் பனையூர் பாபு தர்ணாவில் ஈடுபட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்யூர், திருப்போரூர், வானூர், அரக்கோணம், நாகை, காட்டுமன்னார் கோயில் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட்டது. செய்யூர் தொகுதியில் விசிக சார்பில் பனையூர் பாபு போட்டியிட்டார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் முதல் அடுக்கில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் 2 மற்றும் 3வது அடுக்குகளில் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை மையங்கள் 24 மணி நேரமும் சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு கண்டெய்னர் வாகனங்கள் வந்ததாகவும் அடையாள அட்டை இல்லாத நபர்கள் நுழைந்ததாகவும் சில இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் சிசிடிவி வீடியோ பதிவாகவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், செய்யூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே இண்டர்நெட் மோடம் இருந்ததாகவும் இது குறித்து அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறி விசிக வேட்பாளர் பனையூர் பாபு தர்ணாவில் ஈடுபட்டார்.
செய்யூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக உத்திரமேரூர் அருகே நெல்வாயில் உள்ள ஏசிடி கல்லூரியில் வைக்க்கப்பட்டுள்ளன. அங்கே கடந்த 4 நாட்களுக்கு முன்பு இ.வி.எம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் அறைக்கு அருகே இண்டர்நெட் ஒயர் இருந்ததாகவும் அதை பனையூர் பாபு சுட்டிக்காட்டியதும் அதை அகற்ற மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டதாகவும் பனையூர் பாபு கூறினார். ஆனால், தற்போது ஸ்ட்ராங் ரூமுக்கு அருகே உள்ள வாக்கு எண்ணும் அறையில் இண்டர்நெட் மோடம் ஒன்று உள்ளதாகவும் அந்த இண்டர்நெட் மோடம் குறித்து கேட்டால் அதிகாரிகளிடம் உரிய பதில் இல்லை என்று கூறி பனையூர் பாபு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “செய்யூர் சட்டமன்றத் தொகுதியின் இ.வி.எம்.-கள் வைக்கப்பட்டுள்ள நெல்வாய் ஏசிடி கல்லூரியில் ஸ்ட்ராங் ரூமுக்கு அருகே சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் இருந்தது.
அங்கே வைஃபை வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன. இது விசிக வெற்றியைத் தடுக்க செய்யப்பட்ட அதிமுக - பாஜகவின் சூழ்ச்சியா? தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடமிருந்து எங்களுக்கு விளக்கங்களும் நடவடிக்கைகளும் தேவை” என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.