Election Campaign Live Updates: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பரபரப்பான பிரச்சாரத்தை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் தனது பிரச்சாரத்தை துவங்குகிறார். தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து, தொடர்ந்து 3 நாட்களுக்கு தனது பிரச்சாரத்தைத் தொடர்கிறார்.
இதற்கிடையே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திருக்கழுக்குன்றத்தில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.
Live Blog
Election 2019 LIVE UPDATES: CM Edappadi K Palaniswami campaign at chennai: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் பிரசாரம்
ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் தமிழ்நாட்டில், வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை (மார்ச் 26) கடைசி நாள். இதையொட்டி இன்று முக்கிய வேட்பாளர்கள் பலர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடியில் போட்டியிடும் விஐபி வேட்பாளர்களான கனிமொழி (திமுக), தமிழிசை (பாஜக) ஆகிய இருவரும் அடுத்தடுத்து வேட்புமனுத் தாக்கல் செய்தனர். முன்னதாக தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரான மறைந்த என்.பெரியசாமி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் கனிமொழி.
தென்காசியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரையில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தென்காசி தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக முதலில் கூறியிருந்தார். ஆனால் இன்று தனது நிலைப்பாடை மாற்றிக்கொண்டு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால், வெற்றிவாய்ப்பு அதிகம் என ஆளும்தரப்புக்கு கிடைத்த புலனாய்வு அறிக்கையைத் தொடர்ந்து கிருஷ்ணசாமி தனது நிலையை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது.
ஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக கூறியிருந்த மதிமுக, நேற்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக நிலைப்பாடை மாற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டபோதும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதும் கவனிக்கத்தக்கது.
டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராகக் கொண்ட அமமுக.வுக்கு குக்கர் சின்னம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இன்றைய விசாரணையில் தேர்தல் ஆணையம் வாதிட்டது. ‘டிடிவி தினகரன் தனது கட்சியை பதிவு செய்யவில்லை. எனவே பதிவு செய்யாத கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்ய முடியாது’ என குறிப்பிட்டனர் தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள்.
அப்போது, ‘குக்கர் சின்னம் ஏன் வழங்கக்கூடாது?’ என்பதற்கு விரிவான காரணங்களை நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் கூறவில்லை. நாளை காலை இதற்கான பதிலை தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இடைகால நடவடிக்கையாக தங்களுக்கு குக்கர் சின்னம் கேட்டு டிடிவி தினகரன் தரப்பு முறையிட்டது. அது தொடர்பாக இன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights