eps election campaign : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் கருமந்துறையில் வெற்றி விநாயகரை வழிபட்டு தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.
மக்களவை தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை துரிதப்படுத்தியுள்ளனர். திமுக, அதிமுக கட்சிகள் நேற்று முன் தினம் ஒரே நாளில் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினர். அந்தந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்காடு கருமந்துறை மலை கிராமத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கினார். தனக்கு ராசியான அகாவிலான வெற்றி விநாயகர் ஆலயத்தில் வழிபாடு செய்த பின்னர் முதல்வர் பிரச்சாரத்தை துவக்கினார்.
பிரச்சாரத்தின் போது கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்தும், வாக்கு கேட்டும் பேசினார். பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது, “இது தேர்தல் பிரச்சார துவக்க விழா நிகழ்ச்சி என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்டாயம் வெற்றி பெறும்.
18 தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றிவாகை சூடுவது உறுதியாகி விட்டது. மத்தியில் நிலையான ஆட்சி, உறுதியான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்
நாட்டின் பாதுகாப்பை மோடியால்தான் உறுதிப்படுத்த முடியும்
வாக்காளர்கள் இந்த தேர்தலில் தர்மத்தையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டுகோள் விடுக்கிறேன். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தனக்கென வாழாமல் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அவர்களை ஜெயிக்க வைப்பது உங்களது கடமை.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். அதிமுக ஆட்சியின் திட்டங்களால் எல்லாத் தரப்பு மக்களும் ஏதோ ஒரு வகையில் பயன்பெற்றுள்ளனர். கள்ளக்குறிச்சியில் நிற்கும் எல்.கே.சுதீஷை வெற்றி அடையசெய்யுமாறு உங்களிடம் உரிமையுடன் கேட்கிறேன்” என்று பேசினார்.