Coimbatore South : கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன். நேற்று தன்னுடைய வாக்கினை சென்னையில் பதிவு செய்துவிட்டு கோவை சென்ற அவருக்கு, கோவை தெற்கு தொகுதியில் உள்ள 84வது வார்டுக்கு உட்பட்ட கெம்பட்டி காலனியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
Advertisment
இதனைத் தொடர்ந்து அவரும் அவருடைய மகள் ஸ்ருதி ஹாசனும் கெம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று பணப்பட்டுவாடா தொடர்பாக பார்வையிட்டனர். மேலும் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பணப்பட்டுவாடா தொடர்பாக புகாரும் அளித்தனர்.
இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஸ்ருதி ஹாசன் வாக்குச்சாவடிக்குள் வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய மகளிரணி தலைவரும், அந்த தொகுதியின் பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். அதில், மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, வேட்பாளர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட்டுகளை தவிர வேறு யாரும் செல்லக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதனையும் மீறி, வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் போது ஸ்ருதி வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததாக கூறி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil