General Election 2019: சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடந்த 'திடீர்' பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிமுக - பாமக கூட்டணியும், அதிமுக - பாஜக கூட்டணியும் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டது. பாமகவுக்கு 7 மக்களவை தொகுதியும், மாநிலங்களவையில் ஒரு இடமும் வழங்கப்படும் என ஒப்பந்தம் ஆனது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடந்த இறுதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 5 மக்களவை தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே, தேமுதிக சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு சுதீஷ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை தேமுதிக இதில் கலந்து கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து, நேற்று மாலை விஜயகாந்த் வீட்டிற்கே நேரடியாக சென்ற பியூஷ் கோயல், அங்கு விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோரிடம் பேசினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுவதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
விஜயகாந்தை சந்தித்து பேசிய பின் பியூஷ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், விஜயகாந்த் தனது பழைய நண்பர் என்றும், அவரிடம் உடல்நலம் விசாரிக்க வந்ததாகவும் கூறிச் சென்றுவிட்டார். ஆனால், கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
முன்னதாகவே அதிமுக - தேமுதிக இடையே நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில், 8 மக்களவை தொகுதிகளை தேமுதிக கேட்டதாக தெரிகிறது. ஆனால், அதற்கு அதிமுக தரப்பு சம்மதிக்கவில்லை. 'அதிகபட்சமாக 5 தொகுதிகள் தருகிறோம்' என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதை ஏற்காத தேமுதிக, 8 என்கிற நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருந்தது.
விஜயகாந்தின் இந்த் டிமாண்டிற்கு சம்மதிக்காத அதிமுக, பாஜகவிடம் இந்த விவகாரத்தில் உதவி கேட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்தே பியூஷ் கோயல், நேற்று விஜயகாந்தை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், அப்போதும் விஜயாகாந்த் பிடி கொடுக்காமல் பேச, 'பழைய நண்பரை பார்க்க வந்தேன்' என்று சொல்லி கிளம்பிச் சென்றிருக்கிறார் பியூஷ் கோயல்.
முன்னதாக, விஜயகாந்த் வீட்டில் பேசிவிட்டு வெளிவந்த பியூஷ் கோயல், சுதீஷிடம் தனியாகவும் சில நிமிடங்கள் பேசியிருக்கிறார். தேமுதிக தரப்பில் விஜயகாந்த் காட்டும் கறாருக்கு எதிர் ரியாக்ஷன் காட்டும் விதமாகவே சுதீஷ் காணப்பட்டதாக கூறப்படுகிறது. பியூஷ் கோயல் வந்தபோது இருந்த உற்சாகம், அவர் கிளம்பிச் சென்ற போது சுதீஷிடம் மிஸ்ஸிங் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/a655-300x217.jpg)
எது எப்படி இருந்தாலும், விஜயகாந்தை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று அதிமுக தலைமை உறுதியாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதுவரை பாமக - 7, பாஜக - 5 என மொத்தம் 12 தொகுதிகள் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ளதில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. தவிர புதிய நீதி கட்சிக்கு 1, ஐஜேகேவுக்கு 1, மற்றொரு கட்சிக்கு 1 என 40 தொகுதிகளை கவர் செய்வதே அதிமுகவின் இறுதித் திட்டம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க - திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு! இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு