/tamil-ie/media/media_files/uploads/2021/02/vijayakanth-premalatha.jpg)
2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது விஜயகாந்த்தின் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுகவும் திமுகவும் காத்துக்கிடந்தது. அப்போது அதிமுக கூட்டணிக்கு வந்த தேமுதிகவுக்கு ஜெயலலிதா 41 சீட்களை வாரி வழங்கினார். ஆனால், 10 ஆண்டுகளுக்கு பிறகு, 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இன்று அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிகவிடம் பாராமுகமாக நடந்துகொள்வதாக தேமுதிகவினர் குமுறுகின்றனர்.
அதிமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைப்பதற்கு காட்டும் ஆர்வத்தை தேமுதிகவுடன் ஆர்வம் காட்டவில்லை என்று தேமுதிகவினர் குறைபட்டுக் கொள்கின்றனர். அதிமுக உண்மையில் தேமுதிகவை கண்டுக்கொள்ளவில்லையா? என்ற கேள்விகள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளன. விஜயகாந்த்தின் தேமுதிக போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 8 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. ஆனால், இன்று பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைப்பதில் அலட்சியமாக நடந்துகொள்வதற்கு என்ன காரணம்? தேமுதிகவின் வாக்குவங்கி அதிகரித்திருக்கிறதா? சரிந்திருக்கிறதா? என்ற கேள்விகளும் விவாதங்களும் எழுந்துள்ளன.
சினிமாவில் புரட்சிக் கலைஞர் என்று கலக்கிய விஜயகாந்த் 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தொடங்கினார். தேமுதிக 2006 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அந்த தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றாலும் தேமுதிக 8 சதவீத வாக்குகளைப் பெற்று கவனத்தை ஈர்த்தது.
அதற்கு அடுத்து 2009 நாடாளுமன்றத்தேர்தலில் 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் 10.3 சதவீத வாக்குகளைப் பெற்று தனது வாக்கு வங்கி பலம் அதிகரித்திருப்பதைக் காட்டியது.
இதையடுத்து, தேமுதிக சந்தித்த 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் திருப்புமுனை தேர்தல் என்று சொல்லலாம். தேமுதிக இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. ஜெயலலிதா தேமுதிகவுக்கு 41 சீட்களை வாரி வழங்கினார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்ற தேமுதிக 7.9 சதவீத வாக்குகளை கைப்பற்றியது. அந்த சட்டப் பேரவையில் தேமுதிக முதன்மை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றதன் மூலம் விஜயகாந்த் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார்.
தேர்தலுக்குப் பிறகு, சில மாதங்களிலேயே அதிமுக - தேமுதிக கூட்டணி முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தேமுதிக 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது; இந்த முறை 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. அதோடு, அந்த தேர்தலில் தேமுதிக 5.1 சாதவீதம் வாக்குகளைப் பெற்றது.
இதனிடையே, தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டது. அவருடைய பேச்சும் தடுமாறத் தொடங்கியது. பத்திரிகையாளர்களிடம் எல்லை மீறி நடந்துகொண்டார்.
இதற்கு அடுத்து, தேமுதிக 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், தமாகா இடம்பெற்றிருந்த மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது. மக்கள் நலக் கூட்டணி விஜகாந்த்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது. மக்கள் நலக் கூட்டணியில் 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்தது. இந்த தேர்தலில் தேமுதிக வாக்கு சதவீதம் கனிசமாக சரிந்து 2.41 சதவீத வாக்குகளை பெற்றது. அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர் பேட்டையில் தோல்வியடைந்ததோடு 3வது இடத்தைப் பெற்றார்.
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலிலும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாத தேமுதிக 2.19 சதவீத வாக்குகளைப் பெற்றது. இப்படி தேமுதிகவின் வாக்கு சதவீதம் படிப்படியாக சரிந்துவந்துள்ளதாகவே தேர்தல் தரவுகள் காட்டுகின்றன. ஆனால், கூட்டணியில் இருந்த பாமக 5.2 சதவீத வாக்குகளைப் பெற்றது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் ஆக்டிவாக இல்லாத நிலையில், தேமுதிக 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. ஆனால், தேமுதிக இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா? அல்லது தேமுதிக கூட்டணியில் இடம்பெறுமா? என்ற கேள்வியும் விவாதமும் எழுந்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு திமுக முரசொலி நாளேடு தேமுதிக தொண்டர்களை அதிமுகவிடம் அடகுவைத்துவிடாதீர்கள் என்று பிரேமலதா விஜயகாந்த்தை விமர்சித்து கட்டுரை வெளியிட்டிருந்தது. ஒரு கட்டத்தில் திமுக ஏற்கெனவே தங்கள் கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால் கூட்டணி கதவை சாத்திவிட்டதாகவே திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
தேமுதிக ஆரம்பத்தில் இருந்தே அதிமுக கூட்டணியில் கௌரமான எண்ணிக்கையில் சீட்களைப் பெற்றுவிட வேண்டும் என்றே அதன் நகர்வுகள் இருந்தது.
இந்த சூழலில்தான், ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலையாகி சிறையில் இருந்து வெளியே வந்தார். அதற்கு முன்னதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றங்கள் ஏற்படும் என்று கூறி கூட்டணி கட்சியான அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
சசிகலா விடுதலையான பிறகு, அவருக்கு பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாக வாழ்த்துகளைத் தெரிவித்தார். இது அதிமுக தலைவர்கள் இடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. பிரேமலதாவின் பேச்சால் அதிருப்தி அடைந்த அதிமுக தலைமை தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதில் ஆர்வத்தை இழந்தது. அதோடு, கூட்டணியில் உள்ள மற்றொரு பெரிய கட்சியான பாமகவுடன் கூட்டணியை உறுதி செய்யும் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கியது.
அண்மையில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், அதிமுகவில் கௌரமான எண்ணிக்கையில் சீட்கள் கிடைத்தால் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இல்லையேன்றால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
சென்னையில் நடந்த தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா “வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளது. அதிமுக , திமுகவுக்கு மாற்று கட்சியாக தான் தேமுதிக உருவானது. நிர்வாகிகள் மட்டுமல்ல தொண்டர்களும் தான் கட்சியை கூட்டணிக்கு கொண்டு சென்றுள்ளனர். எனக்கும் கேப்டனுக்கும் இதில் எந்த உடன்பாடும் இல்லை. தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று கேப்டன் கூறியுள்ளார். ஆனால் எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கூட்டணி. கேப்டன் விஜயகாந்த் முதல்வராக ஆக வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பது தேமுதிகவுக்கு புதிதல்ல. கூட்டணியில் இருந்து கொண்டே நம்முடைய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நம் கட்சியினரை புறக்கணிக்கின்றனர். இனி நாம் யாருக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு நிமிடத்தில் இவர் தான் வேட்பாளர் என சொல்லிவிட முடியும். ஆனால்கூட்டணி தர்மத்திற்காக பொறுமை காக்கிறோம், பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. தனித்து நின்றாலும் 15% வரை வாக்கு வங்கி எங்களுக்கு இருக்கிறது. எங்களை நினைத்து பயப்படுகிறார்கள். நாங்கள் வெட்ட வெட்ட வளருவோம்” என்று கர்ஜித்தார்.
பிரேமலதாவின் இந்த பேச்சு அதிமுகவுக்கான எச்சரிக்கை என்று அரசியல் நோக்கர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதிமுகவோ தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் அமைதிகாக்கிறது. இதனால், அதிமுகவுடனான கூட்டணியில் தேமுதிக நம்பிக்கை இழந்துவிட்டதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிகவுக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிதான் ஒரே வாய்ப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் சசிகலா தலைமையில் அமமுக தனித்து போட்டியிட்டால் அதில் தேமுதிக இணைவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.