Advertisment

இடதுசாரிகளுக்கு கிடைத்த 12 தொகுதிகள் எப்படி? எக்ஸ்பிரஸ் அலசல்

சட்டமன்றத் தேர்தலில் மிகுந்த இழுபறிக்கு பிறகு சிபிஐ, சிபிஎம் ஆகிய 2 கட்சிகளும் 6 தொகுதிகளைப் பெற்றன. தாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டாலும் இந்த தேர்தலி திமுக கூட்டணி இடதுசாரிகள் எளிதில் வெற்றி பெறுவோம் என்று இடதுசாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
cpi, cpm, dmk alliance, சிபிஎம், சிபிஐ, திமுக, திமுக கூட்டணி, tamil nadu assembly elections 2021

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா 6 இடங்கள் என மொத்தம் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Advertisment

2016ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற சிபிஐ, சிபிஎம் ஆகிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 25 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியைத் தழுவியது. 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மக்கள் நலக்கூட்டணியில் இருந்த சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக ஆகிய நான்கு கட்சிகளும் திமுக கூட்டணியில் இணைந்தன. தேமுதிகவும் தமாகாவும் அதிமுக கூட்டணிக்கு சென்றன. அதிலும் தேமுதிக இந்த தேர்தலில் அமமுக கூட்டணிக்கு சென்று விட்டது.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் திமுக கூட்டணியில் தலா 2 இடங்களில் போட்டியிட்டு 2 எம்.பி சீட்களையும் வெற்றி பெற்றது. தொடர்ந்து இந்த சட்டமன்றத் தேர்தலில் மிகுந்த இழுபறிக்கு பிறகு சிபிஐ, சிபிஎம் ஆகிய 2 கட்சிகளும் 6 தொகுதிகளைப் பெற்றன. அதிலும், தாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்று சிபிஎம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தளி பாஜக, திருப்பூர் வடக்கு, பவானிசாகர் (தனி), சிவகங்கை, வால்பாறை (தனி), திருத்துறைப்பூண்டி(தனி) என 3 தனி தொகுதி 3 பொது தொகுதி என 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதே போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), கோவில்பட்டி, திண்டுக்கல், அரூர்(தனி), கீழ்வேளூர் (தனி) 3 தனி தொகுதி 3 பொதுத் தொகுதி என 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் - மாரிமுத்து, தளி தொகுதியில் ராமசந்திரன், பாவனிசாகர் (தனி) தொகுதியில் - பி.சி.சுந்தரம், திருப்பூர் வடக்கு தொகுதியில் - சுப்பிரமணி,வால்பாறை (தனி) தொகுதியில் - ஆறுமுகம், சிவகங்கை தொகுதியில் - குணசேகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கீழ்வேளூர் (தனி) தொகுதியில் - நாகை மாலி, திருப்பரங்குன்றம் தொகுதியில் - எஸ்.கே.பொன்னுத்தாய், கோவில்பட்டி தொகுதியில் - கே.சீனிவாசன், கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியில் - எம்.சின்னதுரை, அரூர் (தனி) தொகுதியில் - ஏ.குமார், திண்டுக்கல் தொகுதியில் - என்.பாண்டி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த 6 தொகுதிகளிலும் நேரடியாக அதிமுகவுடன் மோதுகிறது. அதனால், போட்டி கடுமையாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அதே போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பரங்குன்றம், கந்தர்வக் கோட்டை, அரூர், திண்டுக்கல் கோவில்பட்டி ஆகிய 5 தொகுதிகளில் அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது. கீழ் வேளூர் தொகுதியில் பாமகவை எதிர்த்தும் மோதுகிறது. அதே நேரத்தில், கோவில்பட்டி தொகுதியில் அதிமுகவுடன் நேரடியாக மோதுவதோடு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அந்த தொகுதியில் போட்டியிடுவதால் அமமுகவுடனும் நேரடியாக மோதுகிறது. அதனால், சிபிஎம் கட்சிக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும்ம் பாஜகவுடன் நேரடியாக் ஒரு தொகுதியில் கூட மோத வாய்ப்பு அமையவில்லை.

சிபிஎம். தரப்பில் தங்களுடைய வேட்பாளர்கள் அனைவரும் எளிமையான வேட்பாளர்கள். மக்கள் அவர்களை எந்த நேரத்திலும் அணுகலாம், மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்று அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், அதிமுக பாஜக கூட்டணியின் மோசமான நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்று கூறுகின்றனர். மக்களவைத் தேர்தலின் போது, ஆளும் கட்சிக்கு எதிராக வீசிய அலை இந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆளும் கட்சிக்கு எதிராக வீசும். நிச்சயமாக திமுக கூட்டணி வெற்றி பெறும் இடது சாரிகள் 12 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மே 2ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளே எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கும் அதுவரை பொருத்திருந்து பார்ப்போம்.

Tamil Nadu Assembly Elections 2021 Cpm Dmk Alliance Cpi And Mmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment