திமுக அணியில் விறுவிறுவென கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிற நிலையில், அதிமுக அணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே, ஆளும் அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தேர்தல் அறிவிப்புகுப் பின்னர் இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால், தேர்தல் களத்தில், ஆளும் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தமாக ஒரு கூட்டணியும் எதிர்க்கட்சியான திமுக தலைமையில் காங்கிரஸ், சிஐஐ, சிபிஎம், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுகதான் முதலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து கூட்டணி ஒப்பந்தம் செய்தது. ஆனால், அடுத்து பிரதான கூட்டணி கட்சியான பாஜகவுடன் தொகுதி பங்கீடு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், பாஜகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது. ஆனால், அதற்கு பிறகு, அதிமுகவில் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாவதில் தாமதமாகி வருகிறது. தேமுதிக பாமகவுக்கு நிகராகவோ அல்லது கூடுதலாகவோ இடங்கள் வழங்க வேண்டும் என்று உறுதியாக இருந்து வருகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள மற்றொரு கூட்டணி கட்சியான தமாகா 12 தொகுதிகளைக் கேட்டு வருகிறது. அப்போதுதான் தமாக தமிழ்நாட்டில் மீண்டும் சைக்கிள் சின்னத்தை மீட்டு எடுக்க முடியும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு நேர்மாறாக, திமுக தனது கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன்தான் முதலில் கூட்டணி ஒப்பந்தம் செய்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களையும் மமகவுக்கு 2 இடங்களையும் ஒதுக்கியது. இதையடுத்து, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் தலா 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்டு உறுதியாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரசுக்கு 25 தொகுதிகளும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இன்று திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்து ஒபந்தம் கையெழுத்தானது. முருகவேல் ராஜன் தலைமையிலான மக்கள் விடுதலைக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கொங்கு மக்கள் தேசிய கட்சி இடையேயும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதோடு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயளாளரும் எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி இந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனால், திமுக அணியில், தொகுதி பங்கீடு கூட்டணி ஒப்பந்தம் முதலில் இழுபறியாக இருந்துவந்தாலும் பிறகு விறுவிறுவென நடைபெற்று வருகிறது. ஆனால், அதற்கு மாறாக, அதிமுக அணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முதலில் வேகமாக தொடங்கினாலும் தற்போது தேமுதிக, தமாகா ஆகிய பெரிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு கூட்டணி ஒப்பந்தம் இழுபறியாக நீடித்து வருகிறது. தேமுதிக நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.