அதிமுக கூட்டணி கட்டமைப்பதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக இன்னமும் சில கட்சிகளுடன் தொகுதி எண்ணிக்கையை நிர்ணயிக்க முடியாமல் தடுமாறுகிறது. இதனால் கூட்டணி தொண்டர்கள் இடையே குழப்பம் நிலவுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டுகின்றன. அதிமுக அணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்திருக்கின்றன. தேமுதிக.வுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.
திமுக தரப்பில் காங்கிரஸுடன் கூட்டணி சுமூகமாக முடிந்தது. அதைத் தாண்டி ஏற்கனவே திமுக.வுடன் தோழமையுடன் இருந்த கட்சிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குடன் மட்டும்தான் திமுக தொகுதி பங்கீடை முடித்திருக்கிறது.
திமுக சார்பில் தொகுதி பங்கீடு குழு துரைமுருகன் தலைமையில் அமைத்து, பலகட்ட ஆலோசனைகளை தங்களுக்குள் நடத்தியும் தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை நோக்கி நகரவில்லை. குறிப்பாக இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் ஒரு கட்டப் பேச்சுவார்த்தையைத் தாண்டி திமுக.வால் நகர முடியவில்லை.
தேமுதிக.வுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்ததால், இந்தக் கட்சிகளுக்கான பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தேமுதிக.வுடன் கடந்த இரு நாட்களாக பேச்சுவார்த்தை இல்லாத நிலையிலும், தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை திமுக தொடரவில்லை.
இதற்கு காரணம், எண்ணிக்கையில் உருவான இழுபறிதான். திமுக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. அதிக எண்ணிக்கையில் ஜெயித்தால்தான், அடுத்து அமைகிற மத்திய ஆட்சியில் முக்கிய இடத்தைப் பிடிக்க முடியும் என்பது திமுக கணக்கு.
தற்போது காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக திமுக.விடன் 29 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் இருந்து சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மமக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட் கொடுக்கவே திமுக விரும்பியது. மமக.வை உதயசூரியன் சின்னத்தில் நிற்கும்படியும் கூறிவிட்டார்கள். இந்த அடிப்படையில் திமுக 25 இடங்களில் போட்டியிட முடியும்.
ஆனால் மமம, சொந்த சின்னத்தில் போட்டியிடுவதை தங்கள் கொள்கையாக வைத்திருப்பதாக கூறி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதுடன், 2 சீட்கள் வேண்டும் என்பதிலும் கண்டிப்பு காட்டுகிறார்கள்.
மதிமுக, இடதுசாரிகளிடம் சூரியன் சின்னத்தில் நிற்க வலியுறுத்த முடியாது. ஆனால் வைகோ 3 இடங்களையும், இடதுசாரிகள் தலா 2 இடங்களையும் கேட்கிறார்கள். இவர்களில் வைகோ, சிபிஎம் ஆகியோருக்கு தலா 2 சீட்களையும், சிபிஐ மற்றும் சிறுத்தைகளுக்கு தலா ஒரு சீட்டையும் வழங்கலாம் என தனது ஆரம்பகட்ட நிலைப்பாட்டில் இருந்து திமுக இறங்கி வந்திருக்கிறது. ஆனால் தோழமைக் கட்சிகள் இதை ஏற்கவில்லை.
மதிமுக.வைப் பொறுத்தவரை, வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, மல்லை சத்யா ஆகியோருக்கு சீட் பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனுக்கும், ரவிகுமார் அல்லது சிந்தனைசெல்வனுக்கும் சீட் தேவைப்படுகிறது. இந்தக் குழப்பங்களால் திமுக தனது கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை.
கூட்டணிப் பேச்சுவார்த்தை மேலும் சில நாட்கள் நீடிக்கவே வாய்ப்பு!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.