திமுக வேட்பாளர் தேர்வு எப்படி நடக்கிறது? திமுக.வின் உளவுப்படையான ஓ.எம்.ஜி. குரூப்புக்குள் மா.செ.க்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமா? ஒரு ஸ்கேன் பார்வை இங்கே...
திமுக தொண்டர்கள் மந்திரம்போல் உச்சரிக்கும் எழுத்துக்கள் ஓ.எம்.ஜி.! இதன் விரிவாக்கம், ‘ஒன் மேன் குரூப்’. திமுக.வின் உளவுப்படையாக இந்த குரூப்பை வர்ணிக்கிறார்கள். இது வழங்கும் ரிப்போர்ட்களின் அடிப்படையில் திமுக.வின் முக்கியமான நகர்வுகள் இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/IMG-20190221-WA0134-300x188.jpg)
அதுவும் தேர்தல் நேரம் என்றால், இந்த குரூப்பின் தேவையும், வேலையும் அதிகம்தான்! கூட்டணி கட்டமைப்பதை இந்த குரூப்பின் துணையுடன் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அடுத்த சவால், திமுக வேட்பாளர்கள் தேர்வு!
காலம் காலமாக திமுக.வில் மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கம் அதிகம்தான். ‘ஒரு மாவட்டச் செயலாளர் பதவி என்பது, மாவட்ட ஆட்சியர் பதவிக்கு இணையாது’ என அந்தக் கட்சியினர் பெருமையாகவே இதை குறிப்பிடுவதுண்டு. தவிர, கட்சியின் தலைவரே ஆனாலும் மாவட்டச் செயலாளருக்கு தகவல் தெரிவிக்காமல், ஒரு மாவட்டத்திற்குள் நுழைய முடியாது என்றும் மா.செ.வின் பவரை உடன்பிறப்புகள் பறை சாற்றுவதுண்டு.
இந்தப் ‘பவர்’ காரணமாகவே திமுக மாவட்டச் செயலாளர்கள் பலர் ‘குட்டி ஜமீன்’களாக உருவாகிவிட்டார்கள் என்கிற புகார் 2011 தேர்தலுக்கு பிறகு திமுக.வில் எழுந்தது. ஆனால் 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரை திமுக.வில் மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.
இதற்கு உதாரணம், திருப்பூர், திருநெல்வேலி, விருதுநகர், கடலூர் உள்பட 8 தொகுதிகளில் கட்சிக்கு நேரடியாக சம்பந்தமில்லாத நபர்கள் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். இவர்களை பரிந்துரை செய்தது, அந்தந்த ஏரியா மாவட்டச் செயலாளர்கள்தான்!
அதாவது, ஆக்டிவ்வான கட்சி நிர்வாகி ஒருவர் எம்.பி. ஆனால், தனது அரசியலுக்கு இடைஞ்சலாக இருப்பார் என நினைத்து ‘டம்மி’ நபர்களை பரிந்துரைப்பதை பல மா.செ.க்கள் வழக்கமாக வைத்திருந்தனர். திமுக அப்போது அத்தனை தொகுதிகளிலும் வாஷ் அவுட் ஆனதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
அதன்பிறகே ஓ.எம்.ஜி. குரூப்பை அதிகமாக உபயோகப்படுத்தி, மாவட்ட நிர்வாகிகளையே மாற்ற ஆரம்பித்தார் ஸ்டாலின். இந்த முறை வேட்பாளர்களை அடையாளம் காணும் பணியையும் ஏறக்குறைய ஓ.எம்.ஜி. குரூப் முடித்துவிட்டது.
கடந்த 2 மாதங்களாகவே எந்தெந்த தொகுதிகள் திமுக.வுக்கு சாதகமானவை? அந்தத் தொகுதிகளில் எம்.பி. கனவுடன் இருக்கும் கட்சி நிர்வாகிகள் யார், யார்? அவர்களின் பணபலம் என்ன? சமூக பலம் என்ன? பொதுத் தளத்தில் கெட்டப் பெயரை உருவாக்கி வைத்திருக்கிறார்களா? மாற்றுக் கட்சியினருடன் டீலிங் போடக்கூடிய நபரா? என ஆய்வு செய்து தொகுதிக்கு 3 நபர்களை பரிந்துரை செய்திருக்கிறது ஓ.எம்.ஜி.!
அடுத்தகட்டமாக பெயரளவுக்காவது மா.செ.க்களிடமும் கருத்து கேட்கும் படலம் இருக்குமாம். இதற்கிடையே இந்த ஓ.எம்.ஜி. குரூப் பரிந்துரையை கண்டறிந்து, அதில் தங்களின் வசதிக்கேற்றபடி பெயர்களை நுழைக்க சில மா.செ.க்கள் முட்டி மோத ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம்!
திமுக தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ள ஓ.எம்.ஜி.க்குள் அப்படி மா.செ.க்கள் நுழைய முடியுமா? என்கிற கேள்வி எழலாம். எல்லா மா.செ.க்களும் நிச்சயம் நுழைய முடியாது. ஆனால் ‘மலை’ ஊர்க்காரரான வட மாவட்ட விஐபி ஒருவர், இதற்கான ஆப்பரேஷனில் நேரடியாக குதித்திருப்பதாக திமுக மேல்மட்டத்திலேயே குமுறல்கள் கிளம்புகின்றன.
தவிர, வெவ்வேறு மாவட்டச் செயலாளர்களும் இதற்காக மேற்படி ‘மலை’ ஊர்க்கார விஐபி.யை முற்றுகையிட ஆரம்பித்திருப்பதாக தகவல்! இதனால்தான் ஓ.எம்.ஜி.க்காகவே, ‘ஓ மை காட்’ என பரிதாபப்படத் தொடங்கியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.
திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்த பிறகு இன்று (மார்ச் 5) செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘20 தொகுதிகளில்தான் திமுக போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது’ என சற்று வருத்தம் தோய்ந்த குரலிலேயே கூறினார். எனவே சரியான வேட்பாளர்களை தேர்வு செய்யவேண்டிய அவசியத்தை மு.க.ஸ்டாலின் உணராமலா இருப்பார்?