கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், சேலையில் தாமரை சின்னம் அணிந்து வந்து வாக்குச்சாவடியில் வாக்களித்தது தேர்தல் விதிமீறல் என அவர் மீது திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு தனது காரில் பாஜக கொடியை பொருத்திக்கொண்டு வாக்களிக்கச் சென்றதால் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்குப்பதிவு நாளில் கட்சி சார்ந்த சின்னம், முத்திரை என எந்தவித அடையாளத்தையும் வாக்குச்சாவடிக்குள் அணியவோ, எடுத்து செல்லவோ கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம், 2014ஆம் ஆண்டு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட கடித்தத்தில் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ள அக்கட்சியின் தேசிய மகளிரணி பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கோவை டாடாபாத் பகுதியில் வாக்களிக்க வந்தபோது, பாஜக சின்னமான தாமரை முத்திரையை தனது சேலையில் அணிந்திருந்ததாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
வானதி சீனிவாசன் வாக்குச்சாவடி மையத்துக்கு வாக்களிக்க வந்தபோது, பாஜகவின் சின்னமான தாமரையை சேலையில் அணிந்து வந்தது தேர்தல் விதிமீறல் என்று சுட்டிக்காட்டிய திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இதனிடையே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு தேர்தல் விதிகளை மீறி பாஜக கொடி பொருத்திய காரில் வாக்களிக்கச் சென்றதாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”