காங்கிரஸ் கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின்: கமல்ஹாசன் இதற்கு சம்மதிப்பாரா?

மக்கள் நீதி மய்யம் தனியாக தேர்தலில் போட்டியிட்டால், அது அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிவித்துவிடும் என்று திமுக கணக்குப் போடுகிறது. அதனால், மநீம-வை திமுக தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிப்பதாகத் தெரிகிறது.

mk stalin, dmk alliance possiblilities, makkal needhi maiam, kamal haasan, முக ஸ்டாலின், காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், திமுக, திமுக கூட்டணி, congress, ks alagiri

சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாகவே தமிழக அரசியல் தேர்தல் வந்துவிட்டதுபோல தமிழக அரசியல் சூடுபிடித்து பற்றி எரிகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அண்மையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை காங்கிரஸ் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இது திமுகவினர் இடையே புகைச்சலை ஏற்படுத்தியதாக அப்போது பேசப்பட்டாலும், அது குறித்து திமுக தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. கே.எஸ்.அழகிரி திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மநீம இடம்பெற வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தாக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து, தற்போது ஒரு நேர்காணலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மநீம-வை திமுக கூட்டணியில் இடம்பெறுவது குறித்து மனம் திறந்துள்ளார்.

புதுச்சேரியில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும் தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் என்றும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் பேசியது கடந்த மாதம் திமுக கூட்டணியில் சர்ச்சையானது. அந்த நேரத்தில்தான், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேற்பதாகக் கூறினார். காங்கிரஸ் தலைவர்களின் கண்டனத்துக்குப் பிறகு, திமுக புதுச்சேரியில் தனித்து போட்டியிடும் முடிவில் பின்வாங்கியது. அது ஜெகத்ரட்சகனின் தனிப்பட்ட முடிவு என்று திமுக தலைவர்கள் தெரிவித்தனர்.

மற்றொரு பக்கம், திமுக தங்கள் கூட்டணியில் பாமகவை இழுக்க முயற்சி செய்தது. ஆனால், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை ஏற்க வேண்டும் என்பதில் கராராக இருந்தார். அதே நேரத்தில், அவர் அதிமுக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த காட்டிய ஆர்வத்தை திமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்த காட்டவில்லை. அதோடு, திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், சாதியவாத பாமகவும் மதவாத பாஜகவும் இருக்கும் கூட்டணியில் விசிக அங்கம் வகிக்காது என்று தனது முடிவை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்த காரணங்களால் திமுகவும் பாமகவை கூட்டணிக்கு அழைப்பதை கைவிட்டுவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான், திராவிடக் கட்சிகளை கடுமையாக விமர்சித்துவரும் கமல்ஹாசனை திமுக கூட்டணிக்கு அழைப்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனம் திறந்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 7ம் தேதி ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், “சசிகலா வருகையால் அதிமுகவுக்கு ஆபத்து இருக்கலாம். திமுகவுக்கு எந்த பிரச்னையும் கிடையாது… திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைய வேண்டும் என்பது, பாஜக முருகனின் ஆசை.. ஆனால், உடையாது.” என்று திமுக கூட்டணி பலமாக இருப்பதாகக் கூறுகிறார்.

மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணிக்கு வருமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வருவது குறித்து பேச வேண்டும். மக்கள் நீதி மய்யம் வந்தால் பார்ப்போம்.. பேசுவோம்… கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறோம் என்றால், அதில், நாங்கள் குறுக்கிட மாட்டோம்… உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம். அது அவர்களின் விருப்பத்தை பொறுத்தது” என்று கூறினார்.

மு.க.ஸ்டாலின் தனது பேட்டியில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி பற்றி பேசியிருப்பது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் தொகுதி ஒதுக்கீடு, சீட் ஒதுக்கீடுகள் கூட ஓரளவு பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், ஸ்டாலின் பேட்டி மூலம், கமல்ஹாசனுக்காக ஸ்டாலின் காத்திருப்பது தெரியவந்துள்ளது.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுகவுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்க பாமக அல்லது மநீம-வை கூட்டணிக்குள் கொண்டுவர திட்டமிட்டிருந்ததாக தொடக்கத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால், பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், கமல்ஹாசனை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.

தமிழகம் திரும்பிய சசிகலா, பொது எதிரியை வீழ்த்த அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்று கூறியிருப்பதால், ஒருவேளை அதிமுகவும் அமமுகவும் இணைந்தால் திமுகவுக்கு நெருக்கடி ஏற்படும் என்று கருதுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் நீதி மய்யம் தனியாக தேர்தலில் போட்டியிட்டால், அது அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிவித்துவிடும் என்று திமுக கணக்குப் போடுகிறது. அதனால், மநீம-வை திமுக தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிப்பதாகத் தெரிகிறது.

திமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் 180-200 இடங்களில் போட்டியிட்ட திட்டமிட்டுள்ளதால், கமல்ஹாசனின் மநீம திமுக கூட்டணிக்குள் வரும்போது ஏற்கெனவே கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கும் சீட் ஒதுகீடு குறையும் என்று தெரிகிறது. அதே நேரத்தில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு மிகவும் குறைவான எண்ணிக்கையில் சீட் ஒதுக்கீடு செய்யும் என்று யூகங்கள் வெளிவருவதால் வைகோ, திருமா, சிபிஐ, சிபிஎம், என பலரும் அதிருப்தியில் உள்ள நிலையில், இதில் மநீம வந்தால் அதற்கு திமுக எத்தனை சீட் தரும்? மநீம எதிர்பார்க்கும் சீட்களை திமுக தருமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

எப்படியானாலும், திமுக கூட்டணியில் மநீம வருவதற்கு வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது குறித்து மநீம இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. திமுகவுடன் கூட்டணிக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் சம்மதிப்பாரா? அப்படியே கூட்டணி அமைந்தாலும் திமுக தரும் சீட்களின் எண்ணிக்கையை ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இவற்றுக்கு எல்லாம் தேர்தல் அறிவிக்கப்பட்டால்தான் விடை தெரியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk congress alliance likely to form alliance with kamal haasans makkal needhi maiam

Next Story
2021 சட்டமன்றத் தேர்தலில் சசிகலா யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு?vk sasikala, sasikala sasikala alliance with whome, ammk, ttv dinakaran, tamil nadu assembly elections 2021, சசிகலா, அமமுக, சசிகலா யாருடன் கூட்டணி, dmdk, premalatha vijayakanth, sasikala welcome back to chennai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com