திமுக - காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் இடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தொகுதிப்பங்கீடு குறித்த விவாதங்களும் நடைபெற்று வருகிறது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டாலும், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுகளும் யூகங்களும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில், திமுக - காங்கிரஸ் தலைவர்கள் இடையே அதிகாரப்பூர்வமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில், காங்கிரஸ் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் சுர்ஜித்வாலா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதே போல, திமுக சார்பில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, “எங்களுடைய மூத்த தலைவர்கள் உம்மன் சாண்டி, சுர்ஜித்வாலா தினேஷ் குண்டுராவ் என அனைவரும் திமுக தலைவர்களுடன் கூட்டணி சம்பந்தமாக பேசியிருக்கிறோம். நல்ல முறையில் பேசினோம். மகிழ்ச்சிகரமாக பேசினோம். எங்களுடைய கருத்தை நாங்கள் சொல்லியிருக்கிறோம். அவர்களுடைய கருத்தை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் 2 தரப்புமே அவரவர் கட்சி தலைமையுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையடுத்து செய்தியாளர்கள், தொகுதி பங்கீடு குறித்து பட்டியல் ஏதாவது திமுவிடம் கொடுத்திருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு கே.எஸ்.அழகிரி இல்லை என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர்கள், திமுக தலைவர்களிடம் எத்தனை தொகுதிகள் கேட்டார்கள் என்பது குறித்தும் திமுக எத்தனை தொகுதிகள் தருவதாகக் கூறியது என்பது குறித்தோ யாரும் தகவல் தெரிவிக்கவில்லை.
ஆனால், காங்கிரஸ் வட்டாரங்கள் காங்கிரஸ் 50 தொகுதிகளை கேட்டதாகத் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி 35 தொகுதிகளுக்கு கிழே குறையக் கூடாது என உறுதியாக இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், திமுக 25 - 27 தொகுதிகளைத் தருவதாகக் கூறியதாகத் தெரிகிறது. உம்மன் சாண்டி, சுர்ஜித்வால போன்ற முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளதால் திமுக - காங்கிரஸ் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மாலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, திமுக - காங்கிரஸ் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.