காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுவையும் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

By: Updated: February 20, 2019, 08:39:08 PM

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்தது. காங்கிரஸுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுகள், தொகுதிப் பங்கீடுகள் ஏறக்குறைய கிளைமேக்ஸை எட்டியிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், நேற்று (பிப்.19) அதிமுக – பாமக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடந்த இறுதிப் பேச்சுவார்த்தையில் அதிமுக – பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

முடிவில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தவிர, மாநிலங்களவையில் ஒரு இடம் அளிக்கப்படும் என்று ஒப்பந்தம் ஆனது. மேலும், 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கும் என்றும் மக்களவை தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஓ.பி.எஸ் தெரிவித்தார்.

மேலும் படிக்க: அதிமுக – பாமக கூட்டணி! ராமதாஸை மிகக் கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின் (வீடியோ)

அதன்பிறகு, அதிமுக – பாஜக இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பாஜகவுக்கு 5 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தவிர, 21 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது.

தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்ய, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கனிமொழி எம்.பி. நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து, மீண்டும் ராகுல்காந்தியை கனிமொழி நேற்று சந்தித்து பேசினார். மாலை 5 மணி தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 7 மணிவரை நீடித்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது.

டெல்லியில் ராகுல்காந்தியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விவரங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதற்காக கனிமொழி நேற்று இரவு உடனடியாக சென்னை புறப்பட்டார். தி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இன்று சென்னை வந்தார்.

இன்று மாலை 6 மணிக்கு அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவார்கள் என கூறப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு தாமதம் ஆனது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர்கள் சென்னையில் ஹோட்டல் ஒன்றில் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறியா? என்கிற கேள்வி எழுந்தது.

எனினும் இரவு 7.45 மணிக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவாலயம் விரைந்தனர். அங்கு மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வந்து தயாராக இருந்தார். முகுல்வாஸ்னிக், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை திமுக முக்கிய நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் ஸ்டாலினுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தை முடிந்து இரவு 8.30 மணிக்கு மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர்களும் அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

எந்தெந்த தொகுதிகள் என்பதை இரு கட்சிகளின் குழுக்கள் கூடி முடிவு செய்யும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். 21 தொகுதிகள் இடைத்தேர்தல் குறித்து அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் முடிவு செய்வோம்.

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Dmk congress parliamentary election alliance mk stalin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X