முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சூழலில், நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், அதிமுக மற்றும் திமுக சார்பில் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. தனிப் பெரும்பான்மையோடு வெற்றிப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், பிரசாந்த கிஷோர் தலைமையிலான ஐபேக் அணியை பல கோடி ரூபாய் செலவில், திமுக ஒப்பந்தம் செய்தது.
Advertisment
ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து, திமுக வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, ஐபேக் அணி தீவிரமாக வேலை செய்து வந்தது. தொகுதி வாரியாக சர்வே எடுப்பது, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என, தேர்தல் சமயத்தில் திமுக உள்கட்சி செயல்பாடுகளில் ஐபேக் தலையிடாத இடமே இல்லை. ஐபேக் அணியின் செயல்பாடுகள், திமுக வின் முன்னனி தலைவர்கள் சிலரை எரிச்சலடையச் செய்து, உள்கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியதும் நாம் அறிந்ததே. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கிய நாள் முதல், முதல்வர் வேட்பாளர்களுக்கு அடுத்தப் படியாக, உச்சரிக்கப்பட்ட நபர் பிரசாந்த் கிஷோர் என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில், பல்வேறு அரசியல் காட்சிகளை கடந்து, சட்டமன்றத் தேர்தல் எதிர்பார்த்தவாறு நடந்து முடிந்திருக்கிறது. திமுக-ஐபேக் ஒப்பந்தமும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நாளன்று ஐபேக் அலுவலகத்துக்கு ஸ்டாலி திடீர் விசிட் அடித்தது, ஐபேக் ஊழியர்களை உற்சாகமடையச் செய்தது. அப்போது, ‘ஸ்டாலின் தான் வாராரு’ என்ற ஐபேக் வடிவமைப்பில் உருவான திமுக பிரசாரப் பாடல் ஒலிக்க, ஸ்டாலின் செம்ம குஷி. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் திமுக தொண்டர்களுக்கு வேற லெவல் ஃபூஸ்ட்அப்.
இதனை அடுத்து, தேர்தல் முடிவுகளுக்காக தமிழகமே காத்துக் கொண்டிருக்கும் வேளையில், பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு காரணமான ஐபேக் அணி, அறிவாலயத்தை காலி செய்திருக்கிறது. பிரபல அரசியல் செயற்பாட்டாளரான பிரசாந்த் கிஷோரும் குட்பை சொல்லி கிளம்பிவிட்டார். திமுக-ஐபேக் கூட்டணியின் தீவிர வியூகங்களின் முடிவுகளாக, வரும் மே 2-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக காத்திருக்கிறது. நாமும் காத்திருப்போம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )