சென்னையின் 2 முன்னாள் மேயர்கள் மோதும் சைதாப்பேட்டை தொகுதி நிலவரம்; யாருக்கு வாய்ப்பு?

இந்த சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் திமுக சார்பில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். இரண்டு முன்னாள் மேயர்கள் மோதுவதால் சைதாப்பேட்டை தொகுதி கவனத்தைப் பெற்றுள்ளது.

dmk, ma subramanian, திமுக, மா சுப்பிரமணியன், சைதாப்பேட்டை தொகுதி, அதிமுக மா சுப்பிரமணியன்,aiadmk, saidai duraisamy, saidapet constituency, tamilnadu assembly elections, ma subramanian vs saidai duraisamy

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தலைநகர் சென்னையில் உள்ள சைதாப்பேட்டை தொகுதியில் 2 முன்னாள் மேயர்கள் மோதுவதால் தமிழக அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

1952ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி எப்போதும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கும். இந்த தேர்தலிலும் கவனிக்க வைத்துள்ளது. இந்த தொகுதியில் இதுவரை திமுக 9 முறையும் அதிமுக 4 முறையும் காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.கருணாநிதி 1967 மற்றும் 1971 சட்டமன்றத் தேர்தல்களில் சைதாப்பேட்டை தொகுதியில் இருந்து 2 முறை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றிருக்கிறார். சைதாப்பேட்டை தொகுதியில் திமுகதான் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது.

இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் திமுக சார்பில் சென்னையின் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனும் சைதாப்பேட்டை தொகுதியில் வேட்பாளர்களாக மோதுகின்றனர்.

இருவரும் சென்னை மக்களிடையே தொகுதி மக்களிடையே பிரபலமானவர்கள். இந்த தெர்தலில் திமுக வேட்பாளராக சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மா.சுப்பிரமணியன் 2006-11 வரை சென்னையின் மேயராக பதவி வகித்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது தனது தொகுதியை தக்கவைத்துக்கொள்ள சைதாப்பேட்டையில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

அதே போல, அதிமுக சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமி அவருடைய சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளையால் நன்கு அறியப்பட்டவர். 1984ம் ஆண்டு சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அதே நேரத்தில், 1980, 1989, 1996 சட்டமன்ற தேர்தலில் மூன்று முறை தோல்வியைத் தழுவியுள்ளார். சைதை துரைசாமி 2011 – 16 வரை சென்னையின் மேயராக பதவி வகித்தார். அதற்கு முன்னதாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

சைதாப்பேட்டை தொகுதியில் ஆளும் அதிமுக வேட்பாளராக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் எதிர்க்கட்சியான திமுகவின் வேட்பாளராக மா.சுப்பிரமணியனும் பலம் பொருந்திய வேட்பாளர்களாக ஒருவரையொருவர் எதித்து போட்டியிடுகின்றனர். அதனால், இந்த தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதி யாருக்கு சாதகமாக இருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் தேர்தல் பணியை முன்னதாகவே தொடங்கிவிட்டார். ஆனால், சைதை துரைசாமி, அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகே தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதனால், அவர் பிரசாரப் பணியில் முன்னணியில் சென்று கொண்டிருக்கிறார்.

இந்த தேர்தலில் பிரசாரக் களத்தில் அதிமுக வேட்பாளர்களும் திமுக வேட்பாளர்களும் கடுமையான வார்த்தைகளை வீசி பிரசாரம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில், மா.சுப்பிரமணியனும் சைதி துரைசாமியும் தாங்கள் மேயராக இருந்தபோது என்னென்ன செய்தார்கள் என்பதை விவரித்துப் பேசினார்கள்.

சைதை துரைசாமி, “நான் மேயராக இருந்தபோது சைதாப்பேட்டை தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறேன். நான் நல்ல சாலைகளை அமைத்துள்ளேன். எல்.ஈ.டி விளக்குகளை பொருத்தியுள்ளேன். எதிர்க்கட்சி வேட்பாளர் ஒரு நிலம் அபகரிப்பவர். ஆனால், நான் சமூக சேவையைச் செய்யும் ஒரு நபர்” என்று சைதை துரைசாமி என்று கடுமையாக விமசித்துப் பேசினார்.

இதற்கு பதிலாக மா. சுப்பிரமணியன், “ சைதாப்பேட்டை தொகுதியில் எம்.எல்.ஏவாக, தொகுதி நிதியைப் பயன்படுத்தி நல்ல காரியங்களைச் செய்திருக்கிறேன். எனது தொலைபேசி எண் தொகுதியில் வசிக்கும் அனைவருக்கும் தெரியும். நான் அவர்கள் எப்போது கூப்பிட்டாலும் அவர்களுடைய குறைகளைக் கேட்டேன்.” என்று கூறினார்.

சைதாப்பேட்டை தொகுதியில் வாக்காளர்கள் கள யதார்த்தம் மற்றும் மற்றும் ஆட்சிக்கு எதிரானவர்களால் தீர்மானிக்கப்பட வாய்ப்புள்ளது. குடிசை பகுதி மக்களை வெளியேற்றுவது, நீர் தேக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் ஆகியவை சைதாப்பேட்டை தொகுதி மக்களின் முக்கிய பிரச்சனையாக உள்ளன. “சமீபத்தில் நிவர் புயல் பாதிப்பின்போதுகூட, தெருக்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதனால், கழிவுநீர் பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் சைதாப்பேட்டை தொகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனிடையே, கொரோனா காரணமாக வேலையின்மை பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மற்றும் நல்ல வீட்டுவசதி ஆகியவை ஆர்.ஏ.புரம் அருகே உள்ள திடீர் நகர் மக்களின் கோரிக்கைகளாக உள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தால், திடீர் நகரில் வசிப்பவர்களுக்கு அதே இடத்தில் வீடுகள் கட்டித் தரப்படு என்று மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.

“திடீர் நகர் மக்கள் பெரும்பாக்கத்திற்கு மாற்றப்பட்டால், அவர்களுக்கு அங்கே வேலை கிடைக்காது. 2017 ஆம் ஆண்டில் இங்கே உள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியபோது குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் அப்போதைய குடிசைமாற்று வாரிய எம்.டி.யை சந்தித்து இந்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும்” என்று கூறியதாக தெரிவித்தார்.

சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியும் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனும் பலம் வாய்ந்த வேட்பாளர்களாக தேர்தலில் மோதி வருகின்றனர். அதனால், வெற்றிவாய்ப்பு யாருக்கு என்று கூறுவது மிகவும் சவாலான ஒன்று என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதனால், சைதாப்பேட்டை யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk ma subramanian vs aiadmk saidai duraisamy at saidapet constituency in tamil nadu assembly elections 2021

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com