அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆளப் போவது யார் என்ற கேள்விக்கு நாளை விடை தெரிந்து விடும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஐந்து முனை போட்டியிருந்த தமிழக தேர்தல் களத்தில் தேர்தலுக்கு முன் வெளியான கருத்துக் கணிப்புகள் அதிமுக மற்றும் திமுக என இரு முனை போட்டியாகவே தேர்தல் களம் இருக்கும் என்று முடிவுகளை வெளியிட்டன. அதிலும் வெற்றி பெற்று திமுகவே ஆட்சி அமைக்கும் என்று சில நிறுவனங்கள் கூறின.
இந்நிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முடிவுகளிலும் திமுக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் திமுக 160 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளன. திமுக தனிபட்ட முறையில் நடத்திய கருத்துக் கணிப்பிலும் திமுகதான் அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் என்று அவர்களுக்கு முடிவுகள் வந்ததுள்ளது.
கருத்துக் கணிப்புகளில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு என்பதால் அக்கட்சி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமைச்சரவையில் யார் யாருக்கு இடம், காவல்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு எந்ததெந்த அதிகாரிகளை நியமிப்பது? என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் அமைச்சரவையில் இடம் பிடிக்க காய் நகர்த்தி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் கொடைக்கானல் சென்றபோது, அவர் அமைச்சரவை பட்டியலை தயார் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த பட்டியலில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் என்பதை அறிய கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் முயற்சித்து வருகின்றனர்.
இந்த முறை அமைச்சரவையில் இளைஞர்களுக்கு சம்மான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் அதிக பணப்புழக்கம் இருக்கும் முக்கியத் துறைகளை சீனியர்களுக்கு அல்லாமல் ஜூனியர்கள் வசம் ஒப்படைக்க விரும்புவதாக தெரிகிறது.
எனவே திமுக பொதுச்செயலாளர் துரை முருகனுக்கு சட்டத் துறையையும், முதன்மைச்செயலாளர் கே.என் நேருவுக்கு நிதித்துறையும் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் துரைமுருகன் பொதுப் பணித்துறையை விரும்புவதாகவும் அதேபோல் கே.என்.நேரு தான் ஏற்கனவே இருந்த போக்குவரத்து துறையை விரும்புவதாகவும் தெரிகிறது.
நேரு இதற்கு முன்னர் திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை, விவசாயத் துறை, உணவுத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலத்துறை, செய்தித்துறை, மின்சாரத்துறை, பால்வளத்துறை அமைச்சராக என வெவ்வேறு காலங்களில் பதவி வகித்துள்ளார். ஆனால் இம்முறை நிதித்துறை கிடைக்கும்பட்சத்தில் அதுவும் மகிழ்ச்சியே என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். நேரு சட்டசபையில் நிதியமைச்சராக பட்ஜெட் உரை வாசிப்பது பெருமையே என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்ததாக, சபாநாயகர் பதவியை இந்த முறை பெண் உறுப்பினருக்கு வழங்க ஸ்டாலின் முடிவு செய்ததாக தெரிகிறது. எனவே சபாநாயகர் பதவி திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கிடைக்கும் என்று ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.