திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்த முறை முதல்வர் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். தொடர்ந்து, விஐபி தொகுதியாக இருந்துவரும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா? முதல்வர் ஆவாரா? என்று திமுகவினரிடையே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
1984ம் ஆண்டு முதல் ஆயிரம் விளக்கு தொகுதியை தனது சொந்த தொகுதியாக கருதி போட்டியிட்டு வந்த மு.க.ஸ்டாலின் 2011 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இதில், மு.க.ஸ்டாலின் 68,784 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி 65,965 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 2011 சட்டமன்ற்அ தேர்தலில் மு.க.ஸ்டாலின் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியைவிட 2749 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 91,303 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜே.சி.டி.பிரபாகர் 53,573 வாக்குகள் பெற்றார். இதில் மு.க.ஸ்டாலின் 37,730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தின் முக்கிய இரு பெரும் துருவ தலைவர்களான ஜெயலிதாவும் கருணாநிதியும் மறைந்தனர். இதனைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகவும் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும் தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளருமான ஆதிராஜாராம் போட்டியிடுகிறார்.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மு.ஜ.சா ஜமால் முகமது மீரா போட்டியிடுகிறார். அமமுக சார்பில் ஜே.ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி சார்பில், பெ.கெமிலஸ் செல்வா உள்பட 36 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். தமிழகத்திலேயே கொளத்தூர் தொகுதியில்தான் அதிகபட்சமாக 36 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) நடைபெறுகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக முடிவுகள் வெளியாகி உள்ளனர்.
திமுகவின் தலைவராக இருந்தாலும் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியில் மழை வெள்ளம், கொரோனா பொது முடக்க காலம் என கடினமான எல்லா நேரத்திலும் தொகுதி மக்களைச் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்துள்ளார். அதனால், கொளத்தூரில் மு.க.ஸ்டாலினுக்கு செல்வாக்கு உயர்ந்துதான் உள்ளது என்கின்றனர்.
அதே நேரத்தில் அவரை எதித்து போட்டியிடும் அதிமுக வேட்பாள்ர் ஆதிராஜாரமும் வலுவான வேட்பாளர்தான் என்றாலும் மு.க.ஸ்டாலின வெற்றிகொள்வது அந்தளவுக்கு எளிதல்ல என்பதே களநிலவரமாக இருக்கிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமைவிட 25,166 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.