தமிழக சட்டமன்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் திமுக கூட்டணி அதிக இடங்களைப் பெற்றுள்ளது. திமுக 126 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
அதிலும் சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வென்றுள்ளது. தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது திமுக. ஆனால் எல்லா தேர்தல்களைப் போலவும் இந்த தேர்தலிலும் திமுகவால் மேற்கு மண்டலத்தில் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. இந்தமுறை கருத்துக் கணிப்புகளில் திமுக அந்த பகுதியில் கணிசமான இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தன.
மேற்கு மண்டலம் எப்போதும் போல அதிமுகவின் கோட்டையாகவே இந்த தேர்தலிலும் அமைந்துள்ளது. அதுவும் இந்த முறை மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுக முதல்வர் வேட்பாளாராக உள்ளதால் மேற்கு மண்டலம் முழுவதையும் அதிமுக கைப்பற்றும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அதிமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு மண்டலத்தில் திமுக 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் அதிமுக 35 தொகுதிகளில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. திமுக சேலம் வடக்கு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி 93,803 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத் குமாரை தோற்கடித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் திமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் அதிமுக 2 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. அமைச்சர் தங்கமணி குமாரபாளையம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் அதிமுக 5 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. திமுக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும், கருப்பணன் பவானி தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட, திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வி அடைந்துள்ளார். இவருக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வி அடைந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் திமுக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் அதிமுக 5 இடங்களை பிடித்துள்ளது. அவினாசி தொகுதியில் சபாநாயகர் தனபால் வெற்றி பெற்றுள்ளார். தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் முருகன் தோல்வியை தழுவியுள்ளார். உடுமலைபேட்டையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 9 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. திமுக கிணத்துக்கடவு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணி வெற்றி பெற்றுள்ளார். நீண்ட இழுபறிக்கு பிறகு கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். இங்கு போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் 1,425 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் எப்பொழுதும் திமுகவுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இம்முறை கூடலூர் தொகுதியை அதிமுக வசப்படுத்தியுள்ளது. மற்ற இரண்டு தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியை தக்க வைத்துள்ளார். திமுகவின் ஐ.பெரியசாமி 1லட்சம் வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று பாமக வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளும் திமுக வசமானது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் அண்ணாமலை தோல்வியை தழுவியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.