மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி முதன்முதலாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். திமுகவின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி தனது தாத்தா கருணாநிதி போட்டியிட்ட தொகுதி என்ற செண்டிமெண்ட் உணர்வுடன் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் போட்டியிடுகிறார்.
திமுகவின் கோட்டையாக கருதப்படுகிற சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் பெரும்பாண்மையாக இஸ்லாமிய மக்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் மத்தியில் திமுக மீது மதச்சார்பற்ற கட்சி, சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான், திருவல்லிக்கேணி தொகுதியில் அதிக முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், இந்த தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார்.
திமுகவின் கோட்டையாக உள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில்தான் நெருக்கடியே இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பில், ஏ.வி.ஏ கசாலி போட்டியிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ரகு சி போட்டியிட்டுள்ளார். இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) சார்பில், ஆபித் பக்ஷ்க் எச் ஹூசைனும், அமமுக சார்பில் எல்.இராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மு.ஜெயசிம்மராஜா உள்பட 26 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் உதயநிதி முன்னிலை வகித்து வருகிறார். பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ. கசாலி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் உதயநிதி 7635 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். ஏ.வி.ஏ கசாலி 1788 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
4வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் உதயநிதி 17955 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். ஏ.வி.ஏ கசாலி 3452 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயசிம்மராஜா 1,444 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப்பிடித்துள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கசாலியைவிட 67,144 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”