மேற்கு வங்கத்தில் தேர்தல் அலுவலர் ஒருவர் 4 ஈ.வி.எம் மற்றும் வி.வி.பி.ஏ.டி இயந்திரங்களுடன் திரினாமுல் காங்கிரஸ் தலைவரின் வீட்டில் பிடிபட்டதையடுத்து அவர் பணியில் இருந்து செவ்வாய்க்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கைப்பற்றப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் (ஈ.வி.எம்) வி.வி.பி.ஏ.டி இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏசி 177 உலுபிரியா உத்தர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஹவுரா 17வது பிரிவு துணை அதிகாரி தபன் சர்க்கார், ஈ.வி.எம் மற்றும் வி.வி.பி.ஏ.டி இயந்திரங்களை தனது அரசியல்வாதி-உறவினரின் வீட்டிற்கு எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது.
உலுபிரியா உத்தர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள துளசிபிரியா கிராமத்தில் நிந்த சம்பவம் நடந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அங்கே திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் வீட்டிற்கு வெளியே தேர்தல் ஆணைய ஸ்டிக்கருடன் ஒரு வாகனம் நிற்பதை கண்ட கிராம மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியதும் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தான் மிகவும் தாமதமாக அந்த இடத்தை அடைந்ததாகவும், வாக்குச் சாவடி மையம் மூடப்பட்டிருப்பதாகவும் அதைத் தொடர்ந்து அவர் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் கிடைக்காததால் தனது உறவினரின் இல்லத்தில் இரவைக் கழிக்க முடிவு செய்ததாக சர்கார் கூறியுள்ளார்.
இது முறைகேடான நடவடிக்கை என்று குற்றம் சாட்டிய உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய பாதுகாப்பு படைகளின் ஒரு பெரிய குழு இப்பகுதியில் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. கூட்டத்தை சமாதானப்படுத்த அந்த இடத்துக்கு சென்றபோது, அந்த தொகுதி வட்டார வளர்ச்சி அதிகாரியும் சிறைபிடிக்கப்பட்டார்.
பாஜக வேட்பாளர் சிரண் பெரா, இந்த சம்பவம் தேர்தலில் மோசடி செய்வதற்கான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி திட்டத்தின் ஒரு பகுதி என்று குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் மறுக்கப்பட்டது.
பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், “இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பழைய பழக்கம். அவர்கள் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.” என்று கூறினார்.