எடப்பாடி தொகுதியில் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலில் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர் இதுவரை 4 ஆண்டுகள் வெற்றிகரமாக அதிமுக ஆட்சியை தக்க வைத்து வந்ததே பெரும் சாதனைதான் என்றாலும், இந்த தேர்தல் அவருடைய செல்வாக்கு என்ன என்பதை அளவிடக்கூடியதாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில், தனது சேலம் மாவட்டத்தில் தலைநகர் சென்னை அளவுக்கு நிறைய திட்டங்களை கொண்டுவந்து நல்ல பேர் சம்பாதித்துள்ளார். தேர்தலுகு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு என்று முடிவுகளை வெளியிட்டாலும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையுடன் இருக்கிறார்.
தற்போது முதல்வராக இருக்கும் பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் இந்த தேர்தலில் 6வது முறையாக போட்டியிட்டுள்ளார். இதில், 1984, 1991 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அடுத்து 2006 தேர்தலில் தோல்வியடைந்தார். அதற்கு பிறகு, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். 2021 இந்த சட்டமன்றத் தேர்தலில் 6வது முறையாக எடப்பாடியில் களம் கண்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் போலவே எடப்பாடியில் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா? முதல்வர் ஆவாரா என்று அதிமுகவினர் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.
முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில், சம்பத்குமார் என்ற புதுமுகம் போட்டியிடுகிறார். ஒரு முதல்வர் வேட்பாளரை எதிர்ப்பதற்கு புதுமுகமா என்ற கேள்விகள் எழுந்தபோது, அவர் புதுமுகமாக இருக்கலாம். ஆனால், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வகணபதி பரிந்துரை செய்தவர். அவர் பலமான வேட்பாளர்தான் என்கிறார்கள் திமுகவினர்.
செல்வகணபதி அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர். அதிமுகவில் இருக்கும்போது அவர் எடப்பாடி பழனிசாமிக்கே சீனியர். அதனால், அவர் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுப்பார் என்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், சம்பத்குமார் எடப்பாடியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி பாமகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்ததாலும் வன்னியர்கள் வாக்குகளை அள்ளிவிடலாம் என்று தைரியமாக இருக்கிறார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் தொகுதியில் கட்சி நிர்வாகத்திலும் அரசு நிர்வாகத்திலும் கை ஓங்கி இருப்பதால் அதிமுகவுக்குள்ளே இருக்கும் புழுக்கம் அவரை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளன.
எடப்பாடி தொகுதியில் முதவர் பழனிசாமி, அவரை எதிர்த்து திமுகவில் சம்பத்குமார், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜமுனா, அமமுக சார்பில் பூக்கடை சேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி, தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவில், முன்னிலை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்து திமுக வேட்பாளர் சம்பத்குமார் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் எடப்பாடி பழனிசாமி, 17,164 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளார் சம்பத்குமாரைவிட 10,674 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். திமுக வேட்பாளர் 6,490 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
9வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் எடப்பாடி பழனிசாமி, 50,562 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளார் சம்பத்குமாரைவிட 32,135 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். திமுக வேட்பாளர் 18,432 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி 81,514 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
எடப்பாடி தொகுதியில் இறுதிச் சுற்று எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக வேட்பாளர் சம்பத்குமாரைவிட 90,255 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.