Election 2019: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்துக் கட்சிகளும் அதற்கான வேலையில் மூழ்கி விட்டன.
தேர்தலின் முக்கிய அம்சமாகக் கருதப்படும், வேட்பாளர் பட்டியலை முன்னணி கட்சிகள் வெளியிட்டு விட்டன. தமிழகத்தின் முதன்மையான கட்சிகளாகக் கருதப்படும் தி.மு.க, அ.தி.மு.க-வில் வழக்கத்திற்கு மாறாக வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் யாரெனப் பார்ப்போம்.
தி.மு.க-வை எடுத்துக் கொண்டால், வட சென்னையில் டாக்டர் கலாநிதி வீராசாமி (முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன்), தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் (முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள்), மத்திய சென்னையில் தயாநிதி மாறன் (முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் மகன்), வேலூரில் டி.எம்.கதிர் ஆனந்த் (பொருளாளர் துரை முருகனின் மகன்), கள்ளக்குறிச்சியில் கெளதம சிகாமணி (முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன்), தூத்துக்குடியில் கனிமொழி (முன்னாள் தி.மு.க தலைவர், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள்) என 6 பேர் வாரிசு வேட்பாளர்களாகக் களம் இறங்குகிறார்கள்.
மொத்தம் 20 வேட்பாளர்களில் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் என 2 பெண்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது தி.மு.க
அ.தி.மு.க-வில் தென் சென்னையில் ஜெயவர்தன் (அமைச்சர் ஜெயக்குமாரின் மகன்), தேனியில் ரவிந்திரநாத் குமார் (துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகன்), திருநெல்வேலியில் மனோஜ் பாண்டியன் (பி.ஹெச்.பாண்டியனின் மகன்), மதுரையில் ராஜ் சத்யன் (ராஜன் செல்லப்பாவின் மகன்) ஆகிய 4 பேர் அரசியல்வாதிகளின் வாரிசுகளாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் 20 வேட்பாளர்களில் காஞ்சிபுரத்தில் போட்டியிடும் மரகதம் குமரவேல் என்ற பெண் வேட்பாளருக்கு மட்டும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள்.
தவிர, தென் சென்னை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, நீலகிரி, பொள்ளாச்சி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 8 தொகுதிகளில் தி.மு.க, அ.தி.மு.க நேரடியாக மோதுகின்றன.