அதிமுக அணியில் 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என ஒதுக்கீடு செய்யப்பட்ட தெம்புடன் 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தை சந்திக்கிறது பாமக.
பாமக.வின் கோட்டைக்குள்ளேயே விடுதலை சிறுத்தைகளும் சிதம்பரம், விழுப்புரம் (தனி) என தங்களது இரு தொகுதிகளையும் தேர்வு செய்திருப்பது இப்போதே போலீஸ் வட்டாரத்தை பரபரக்க வைத்திருக்கிறது. இதில் விழுப்புரம் (தனி) தொகுதியை அதிமுக அணியில் பாமக.வுக்கு ஒதுக்குவதாகவும் தகவல்கள் வருகின்றன. அது நிஜமென்றால், அங்கு பாமக- விசிக நேரடி போட்டி நடக்கும்.
விழுப்புரத்தில் பாமக வேட்பாளராக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான வடிவேல் ராவணன் களமிறப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல விசிக சார்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான ரவிக்குமார் நிற்கும் வாய்ப்பு இருக்கிறது.
தருமபுரி அல்லது ஆரணியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அல்லது அவரது மனைவி சவுமியா நிற்க இருப்பதாக தெரிகிறது. இவர்கள் இருவரில் அன்புமணி இப்போது போட்டியிட்டு ஜெயித்தால், ராஜயசபா சீட் கிடைக்கையில் சவுமியா எம்.பி. ஆவாராம். பசுமைத் தாயகம் அமைப்பின் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்து வரும் சவுமியாவுக்கு அது நேரடி அரசியலாக இருக்கும்.
பாமக.வின் ஏ.கே. 47 என அழைக்கப்படும் ஏ.கே.மூர்த்திக்கு ஒரு தொகுதி உறுதி என்கிறார்கள். மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளும் பாமக.வுக்கு வழங்கப்பட இருக்கிறதாம். மத்திய சென்னையில் சாம் பால், திண்டுக்கல் தொகுதியில் அந்தக் கட்சியின் மகளிரணி நிர்வாகி திலகபாமா ஆகியோர் வேட்பாளர்களாக முடிவு செய்யப்பட்டிருப்பதாக பாமக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
தங்களுக்கு செல்வாக்கான கடலூர் தொகுதியையும் உறுதியாக கேட்டிருக்கிறது பாமக. இங்கு வன்னியர் சங்கம் காலம் தொட்டு தன்னுடன் நெருக்கமாக இருக்கும் டாக்டர் கோவிந்தசாமியை நிறுத்த டாக்டர் ராமதாஸ் விரும்புவதாக தெரிகிறது.
இதே தொகுதியை ராமதாஸின் உறவு வட்டாரத்தை சேர்ந்த தனராஜூம் குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கோவிந்தராஜூக்கு வயது மூப்பு, ஒரு மைனஸ்! இந்தத் தொகுதியில் நட்பா, உறவா? என பாமக தலைமை நெருக்கடியில் தவிப்பதாக கூறுகிறார்கள். ‘தன்ராஜ்தான் வேண்டும் என்றில்லை, வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு ஆக்டிவான வேட்பாளர் ஒருவரை அங்கு களமிறக்க வேண்டும்’ என்கிற கோரிக்கையையும் தலைமையிடம் கட்சி நிர்வாகிகள் எழுப்பி வருகிறார்களாம்.
பாமக இந்த முறை எப்படி ஜெயிக்கப் போகிறது? என்பதைப் பொறுத்தே வரும் தேர்தல்களில் வட மாவட்டங்களில் கூட்டணிக் கணக்கை எல்லாக் கட்சிகளும் மேற்கொள்ளும்.