Vellore Election: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இன்று காலை செய்தி வெளியிட்டது போலவே வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு இன்று (ஏப்ரல் 16) இரவு 7.30 மணிக்கு வெளியானது.
காலையில் வெளியான செய்தி கீழே:
வேலூர் மக்களவைத் தொகுதியில் கடந்த வாரம் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அங்கு தேர்தல் ரத்தாகும் எனத் தெரிகிறது.
தேர்தலை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 18-ம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தலும், அந்தத் தொகுதியின் கீழ் வரும் ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு, வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடமிருந்து கோரிக்கை ஒன்று வந்துள்ளது.
ஒருவேளை அவ்வாறு ரத்து செய்யப்பட்டால், பணப் புழக்கத்தால் தேர்தல் ரத்து செய்யப்படும் முதல் மக்களவைத் தொகுதி என்ற பெயரை வேலூர் பெறும்.
2017-ல் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், ஆகிய தொகுதிகளில் அதிமுக-வைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் பணம் விநியோகம் செய்ததாக அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது.
2012-ம் ஜார்கண்ட் மாநிலத்தின் 2 மாநிலங்களவை இடங்களில் மேற்கூறிய காரணங்களுக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது.
திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 29-ம் தேதி அவர்களின் வீடு மற்றும் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது துரைமுருகன் வீட்டிலிருந்து கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பின்னர் ஏப்ரல் 1-ம் தேதி ராணுவப்படையின் துணையுடன் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வருமான வரித்துறையினரின் அறிக்கையைப் பெற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் தற்போது வேலூர் தொகுதியின் தேர்தலை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்திருப்பதாகத் தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.